Tuesday 6 June 2017

மலேசிய சாதனை புத்தகத்தில் ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்கள் தடம் பதித்தனர்!



ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்களின் முயற்சியில் மிகச் சிறப்பாக உருவாக்கிய ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்து சாதனை செய்துள்ளது.

ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்களின் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு இங்குள்ள பெட்டாலிங் ஜெயா, லைப் ஆர்ட்ஸ் மையத்தில் பிற்பகல் 3.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரையில் மிக பிரம்மாண்டமாக வெளியீடு கண்டது.


இந்நிகழ்விற்கு சிறப்பு பிரமுகர்களாக பின்னணி பாடகி டத்தின்ஸ்ரீ சைலா நாயர், கலைஞர்களின் காப்பாளர் டத்தோ டிபாகரன், காப்பார் சட்டமன்ற உறுப்பினர் மணிவண்ணன் கோவின், டத்தோ வேணுகோபால், டத்தோஸ்ரீ டாக்டர் தினகரன் நாயர், டத்தின்ஸ்ரீ பரமேஸ்வரி, டத்தின் ஜெயந்தி, உமா இராமசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகரில் முதல் பிரிவில் 22 மாணவர்களுடன் தோற்றுவிக்கப்பட்ட ஒடிசி இசை பயிலரங்கு இன்று 9ஆவது பிரிவில் 66 மாணவர்களைக் கொண்டு கர்னாடக இசை, மெல்லிசை (Light Music) ஆகிய இரு வகையான இசைகளுக்கு  முக்கியத்துவமளித்து சிறப்பான முறையில் இசை வகுப்புகளை வழி நடத்தி வருகிறது.


ஒவ்வோர் இசைக் கலைஞனுக்கும் தேவையான இசை திறன்களையும் நுணுக்கங்களையும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாணவரின் ஆர்வமும் பங்களிப்பும் அவர்களின் இசை பயிற்சிக்கு உறுதுணையாக உள்ளன. நாங்கள் ஒடிசியில் சுய பயிற்சி முறையை உருவாக்கி அதனை முறையாக மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து தக்க பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அதுதான் இன்று இந்த வெற்றிக்கு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று ஒடிசி இசை பயிலரங்கின் தலைமை பயிற்றுநரும் நாட்டின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஜெய் குறிப்பிட்டார்.

மாணவர்களைப் பாடுவதற்கு மட்டும் பயிற்சிகள் வழங்காமல் அவர்களை இசைத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களுக்கு பாடல் எழுதும் பயிற்சிகள், இசைக் கருவிகள் பயன்படுத்தும் நுணுக்கங்களையும் போதித்து அவர்களைத் தயார் நிலைப்படுத்தியுள்ளனர். 


ஒடிசியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் பிரிவின் இறுதியில் தனது சுய முயற்சியில் பாடலை குழு அமைத்து அவர்களே பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து பாடி பாடலை உருவாக்க வேண்டும். இதன்வழி அவர்களின் கற்றல் கற்பித்தல்களை சோதனை செய்யவும் அவர்களைக் கலைஞர்களாக உருவாக்கவும் இயலும் என ஒடிசி இசை பயிலரங்கின் பயிற்றுநர்களில் ஒருவரும் பின்னணி பாடகியுமான பிரித்தா பிரசாத் தெரிவித்தார்.

இதனிடையே, உருவாக்கிய பாடல்களை ஓர் இசைத் தொகுப்பாக வெளியிட்டால் அவர்களின் படைப்புகளுக்கு ஓர் அங்கீகாரம் வழங்க முடியும். அதேசமயத்தில் அவர்களைக் கலைஞர்களாக அறிமுகப்படுத்தவும் முடியும் என்ற நோக்கத்தில் ஒடிசி பயிலரங்கின் நிர்வாகம் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ எனும் இசைத் தொகுப்பை உருவாக்கியது. 

இந்த இசைத் தொகுப்பில் 9 பிரிவு மாணவர்களையும் ஒன்றிணைத்து அதில் 66 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து 19 குழுக்களாக பிரித்து அவர்களே சுயமாக பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து பாடியும் உள்ளனர்.  19 பாடல்களையும்  66 மாணவர்களையும் நிர்வகிப்பதற்கும் அவர்களுக்கான தளத்தையும் வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுப்பதற்காக “ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ்" எனும் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று ஒடிசி இசை பயிலரங்கின் தலைமை செயல் முறை அதிகாரி உன்னி கிருஷ்ணன் கூறினார்.

இந்நிகழ்வில் “ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ்” அதிகாரப்பூர்வமாக வருகையளித்த சிறப்புப் பிரமுகர்கள் தலைமையில் பிரம்மாண்டமாக வெளியீடு கண்டது. அதேவேளையில், ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பும் வருகையாளர்களின் முன்னிலையில் சிறப்பாக வெளியீடு கண்டது.



இந்த இசைத் தொகுப்பில் ஒவ்வொரு பாடலும் 1 நிமிடம் முதல் 2.30 நிமிடங்களுக்கிடையில் 19 பாடல்கள் உருவாகியது இந்த இசைத் தொகுப்பின் சிறப்பான அம்சமாகும். 

மேலும், ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு வலையொளியிலும் இணையத்திலும் வெளியீடு காணவுள்ளதாகவும் விரைவில் இணையதள அங்காடிகளில் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் “ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ்" தோற்றுநரும் இசையமைப்பாளருமான  ஜெய் தெரிவித்தார்.

இதற்கிடையில், ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு நேரடி விற்பனைக்கும் வரவுள்ளது. நாடு தழுவிய நிலையில் அதன் இசை முழங்கவுள்ளது. மேலும், உள்ளூர் வானொலிகள் தங்களது சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.


நாட்டில் முதல் முறையாக ஒரு இசை பயிலரங்கு தனது இசைத் தொகுப்பு வெளியீடுவதும் அதேவேளையில் அதிகமான இசைக் கலைஞர்களும் அதிகமான இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றிய இசைத் தொகுப்பாகும். ஆகையால், இதன் காராணமாகதான் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது என்று மலேசிய சாதனை புத்தகத்தின் பிரதிநிதி ஐமான் இஷ்ஷாஸ் குறிப்பிட்டார்

ஒவ்வொரு மாணவரின் பாடல்களும் இந்நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன. அதே சமயத்தில் அவர்களை நிகழ்வின் அறிவிப்பாளர் டி.எச்.ஆர் ராகா புகழ் கவிமாறன் நேரடியாக நேர்காணல் செய்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment