Friday, 30 June 2017

24 மணிநேரத்திற்கு முன்னர் தொலைபேசி மிரட்டல் - சக்திவேல் பாட்டி தகவல்

ஜோர்ஜ்டவுன் -
ஹோட்டல் பணியாளர் எம்.சக்திவேல் கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தனக்கு தொலைபேசி வழி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரின் பாட்டி தேவி (வயது 60) தெரிவித்தார்.

நேற்று முன்தினம் தனது அறையில் நைலோன் கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சக்திவேல் இறந்து கிடந்தார். ஐவர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு சக்திவேல் இறந்ததாக நம்பப்படுகிறது.

இதனிடையே, சக்திவேல் கொல்லப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் மறுமுனையில் பேசியவன், 'சக்திவேல் இறந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்களா? என கேட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டதாகவும் அந்த பாட்டி கூறினார்.

'நான் உடனடியாக சக்திக்கு தொடர்பு கொண்டேன். தான் பத்திரமாக இருப்பதாக அவன் கூறினான். அடுத்த நாளே அவன் இறப்பான் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை' என்றார்.

சக்திவேல் கொலை தொடர்பில் 30 வயது பெண்ணும் 15 முதல் 22 வயது வரையிலான மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment