மலேசியாவின்
மிகப் பெரிய சுற்றுலாப் பெருவிழாவான 'மாட்டா கண்காட்சி' இவ்வாண்டு இரண்டாவது முறையாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர், புத்ரா உலக
வாணிப மையத்தில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி
10ஆம் தேதி வரையில் நடைபெறும் இக்கண்காட்சியில் 1,000க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன. உள்நாட்டுச்
சுற்றுலா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருக்கும் மிகச் சிறந்த
சுற்றுலாத் தளங்களுக்கும் நியாயமான விலையில் பயணிக்கும் வாய்ப்பினை இக்கண்காட்சி ஏற்படுத்தித்
தரவுள்ளது.
சுற்றுலா விரும்பிகளுக்கு கொண்டாட்டமளிக்கும் இந்தக் கண்காட்சி நிகழ்வின்
சிறப்பே அட்டகாசமான விலை கழிவில் கிடைக்கும் சுற்றுப் பயண வாய்ப்புகள்தாம்.
பிரமாண்டமான இந்த வாணிப மையத்தில் இம்முறை 4 முக்கிய அரங்கங்கள்
சுற்றுலாத் தளங்களின் தகவல்களைப் பெறவும் சுற்றுப்பயணங்களின் விற்பனைகளுக்காகவும் ஒதுக்கப்படவுள்ளன.
உதாரணத்திற்கு, ஓர் அரங்கில் மலேசியா முழுவதிலும் உள்ள அனைத்து ரக
சுற்றுப்பயணங்களின் விற்பனை, மற்றோர் அரங்கில் ஆசியான் நாடுகளின்
சுற்றுலா, இஸ்லாமியர்களுக்கேற்ற ஆன்மிக சுற்றுலா, ஐரோப்பா, ஜப்பான், ஆப்பிரிக்கா
என அவை பிரிக்கப்பட்டுள்ளன.
மலேசிய சுற்றுலாவுக்கான அரங்கில் உள்நாட்டில் அமைந்துள்ள ‘டீம் பார்க்ஸ்’
(நீர், கேளிக்கை விளையாட்டுப் பூங்காக்கள்)
பங்கேற்கவிருக்கின்றன. எனவே, அவற்றின் முழு சுற்றுலா சலுகைகளுடன் கூடிய நுழைவுச்சீட்டுகளை சுற்றுலா விரும்பிகள்
சிறப்பான விலையில் பெற முடியும்.
'2017
ஆசியான் வருகை ஆண்டு' என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர்,
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, புருணை,
மியான்மார், வியட்னாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும்
பிரத்தியேக சுற்றுலா முகவர்களிடமிருந்து பொன்னான பல பயண வாய்ப்புகளும் இக்கண்காட்சியில்
கலந்துகொள்பவர்களுக்காக காத்திருக்கின்றன.
அதனைத் தவிர்த்து, ஆடம்பர சொகுசு கப்பல்களின் நிறுவனங்களும்
கற்பனைக்கும் எட்டாத அளவில் அருமையான விலை கழிவில் சுற்றுப்பயண வாய்ப்புகளைத் தரவிருக்கின்றன.
மேலும், அடிக்கடி வெளிநாடு செல்வோருக்காக புகழ்பெற்ற
பல விமான நிறுவனங்கள் சிறப்பு விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யவிருக்கின்றன.
பொதுவாகவே பலர் ஆண்டு இறுதியில் அல்லது விடுமுறை காலங்களில் சுற்றுப்பயணம்
செல்ல திட்டமிட்டிருப்பர்.
அத்தகையோர் இந்த 'மாட்டா கண்காட்சி'க்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
முதலில் தாங்கள் விரும்பும் சுற்றுப்பயணங்களைப் பற்றி கண்காட்சியில்
பங்கேற்கும் பல முகவர்களிடம் கேட்டறிந்து, பின் சிறந்த சுற்றுலா வாய்ப்பினை தேர்ந்தெடுக்க
ஏதுவாக இது அமைந்துள்ளது. ஓரிரு சுற்றுலா முகவர்கள் அன்றி,
இங்கு நூற்றுக்கணக்கான முகவர்கள் கூடாரம் அமைக்கவிருப்பதால்,
பயணிகளுக்கான தேர்வு இங்கே ஏராளம்.
ஒவ்வோர் ஆண்டும் மாபெரும் அளவில் விரிவாக்கம் கண்டு வரும் 'மாட்டா கண்காட்சி'
உள்நாட்டினர் மட்டுமல்லாது, நம் நாட்டுக்கு வருகை
புரியும் வெளிநாட்டினர் மத்தியிலும் மகத்தான வரவேற்பை பெற்று வருகிறது.
உடலையும்
மனதையும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள சுற்றுப்பயணத்தைவிட சிறந்ததொரு மருந்து இல்லை எனலாம். அதேவேளையில்,
தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, உல்லாசமாகப் பொழுதைக்
கழிப்பதிலும் விவேகத்துடன் செயல்படுவதே நல்லது. இதே சிந்தனையில்
நீங்கள் ஆழ்ந்திருந்தால், உங்கள் அன்பிற்குரியவர்களுடன்
'மாட்டா கண்காட்சி'யை வலம் வர மறவாதீர்கள்.
No comments:
Post a Comment