Tuesday 3 April 2018

வாழ்வியல் நெறிகளை சொன்ன மொழி 'தமிழ் மொழி'- டத்தோ சரவணன் புகழாரம்


கோலாலம்பூர்-
"பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்த மொழி தமிழ். அவனியில் அவதரித்த அத்தனை மொழிகளிலும்.  ஏற்றம் மிகக் கொண்ட ஏகாந்த மொழி. உயர் தனிச் செம்மொழி தமிழ் (classical language)"

"தமிழ் மொழியின் வெற்றி, நமது இனத்தின் எல்லைகளை தாண்டி, பிற மலேசியர்கள் இன மொழி பேதமின்றி தமிழை கற்க செய்தலிலே உள்ளது."

"உடலுக்கு உரமேற்றும் உயிர்க்கு உணர்வூட்டும் மொழி தமிழ். இலக்கிய இலக்கண அழகுடன், காலத்தை வென்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இனிமை குன்றாமல் நெஞ்சத்தை நெகிழச் செய்கிறது அருந்தமிழ். முச்சங்கம் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது என சன் பெங் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் கூட்டரசுப் பிரதேச மாநில அளவிலான செந்தமிழ் விழாவை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் கூறினார்.

"அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே, ஓலைச் சுவடி, செப்பேடு ஆகியவற்றில் தமிழ் மொழி எழுதப்பெற்று வந்துள்ளது. காலத்தை வென்ற மொழி, தமிழ் மொழி. ஒலி வடிவம், வரி வடிவம் என்ற வடிவங்களைக் கொண்ட பொருள் தரும் மொழி தமிழ். எந்த மொழியின் துணையும் இன்றி தனித்து இயங்கும் சிறப்பு தமிழுக்கு உண்டு."

"திருவள்ளுவர், கவிச்சக்ரவர்த்தி கம்பன், புரட்சி கவிஞர் அமரகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசனும், அணைத்துக் கொண்டு கவிபாடி களித்த மொழி, இன்பத் தமிழ்."

"இலக்கண இலக்கிய செல்வங்கள் நிறைந்தது தமிழ் மொழி. உயர்ந்த சிந்தனை, வரலாற்றுப் பின்னணி, தனித்துவம், காலத்திற்கேற்ற புதுமை இப்படியாக தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன."

"பல்லாயிரம் ஆண்டுகள் இலக்கிய தொன்மை வாய்ந்தது. இது தமிழின் தனிச் சிறப்பு. காப்பியங்களும், கல்வெட்டுகளும்,  சிற்பங்களும், கட்டடங்களும் தமிழ் மொழியின் தொன்மைக்கு சான்று."

"இது வெறும் வார்த்தை மொழியல்ல, வர்த்தக மொழி மட்டும் அல்ல. இது, அறத்தின் மொழி, பன்பாட்டு மொழி, வாழ்வியல் நெறி சொன்ன மொழி என தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்தார் டத்தோ சரவணன்.

செந்தமிழ் விழாவை ஏற்பாடு செய்த குழுவினரை டத்தோ சரவணன் வெகுவாக பாராட்டினார்.

2 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் ஆரம்ப, தேசிய மொழி, இடை நிலைப்பள்ளிகளைச் சார்ந்த சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment