Wednesday 4 April 2018

தமிழ் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்; “100 சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழாவில் டான்ஶ்ரீ ராஜு பேச்சு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர்களை கௌரவிப்பதால் அவர்களுக்கு ஊக்குவிப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் நம் தாய்மொழியான தமிழ் மொழியும் மேலோங்கும்.  தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி இதுபோன்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது நம் மொழிக்கு சமர்ப்பணம் ஆகும் என்று ஈப்போ பாராட் தொகுதி மஇகா தலைவர் டான்ஶ்ரீ கோ.இராஜூ தெரிவித்தார்.

நம் நாட்டின் எழுத்தாளர்களை உலக அளவில் கொண்டு செல்வதில் மலேசிய தமிழ் மணிமன்றம் எடுத்துள்ள இந்த முயற்சியை தாம் பெரிதும் பாராட்டுவதாக அவர் கூறினார்.

பொதுவாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை மிக குறைவாகவே காணப்படும். ஆனால், இம்முறை இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமது வாழ்த்துகளை கூறியதோடு இதுபோன்ற புத்தக வெளியீட்டு விழாவில் தொடர்ந்து பெரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இனம், மொழி, சமயம், கலை, கலாச்சாரம் என வேறுபட்ட நாடாகும் மலேசியா. இந்த வேறுப்பட்டு பல மொழிகள் இருந்தாலும், நம் தமிழ் மொழியை இந்நாட்டில் நிலைக்க செய்வது நம் கையில்தான் உள்ளது.

அரசாங்கமும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறைய உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றது. தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், நம் தமிழ்ப்பள்ளிகளுக்காக அதிக ஒதுக்கீடு செய்து வருகிறார். தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழ் மொழியும் வளர்ச்சி காணும் என்பதை யாரும் மறுக்க இயலாது.

மலேசிய தமிழ் மன்றம் ஈப்போ மாநகர் கிளை, மலேசிய தமிழ் மணி மன்ற பேரா மாநிலத் தொடர்புக் குழு இணை ஏற்பாட்டில் தமிழ் சிறுகதை நூற்றாண்டில் “நூறு சிறுகதைகள்” தொகுப்பு நூல் அறிமுக விழா இங்குள்ள மஇகா ஈப்போ பாராட் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேரா மாநிலத்திலுள்ள ஐந்து எழுத்தாளர்களை சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மேலும் மெருகூட்ட மலேசிய மணிமன்றத்தின் தேசியத் துணைத் தலைவர் என்.எஸ்.சிவபிரகாசம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் சிறுகதை தொகுப்புகளின் சிறப்புகளை அவர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பேராக் மாநில மஇகா தலைவரும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வி.இளங்கோ, பேராக் மாநில மஇகா மகளிர் தலைவி தங்கராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment