Friday 9 August 2019

சிறார் மதமாற்றம்; இப்போதைய அவசரம் என்ன?

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தேசிய மொழி பாடத்திட்டத்தில் ‘காட்’ எனப்படும் அரேபிய சித்திர மொழி அமலாக்கம் செய்யப்படுவது தொடர்பாக எழுந்த முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் எழுந்த அதிருப்தி அலை ஓய்வதற்குள் இன்னொரு விஸ்வரூபப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டுள்ளது சிலாங்கூர் மாநில அரசு. 
18 வயதுக்கும் குறைவான சிறார்களை மதமாற்றம் செய்வதற்கு தாய் அல்லது தந்தை (IBU atau BAPA) ஒருவரின் சம்மதம் போதுமானது என்ற சட்ட திருத்த மசோதாவை நேற்று மாநில மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தாக்கல் செய்தது பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மத்தியில் காரசாரமான விவாதமாக முன்னெடுக்கப்பட்ட வேளையில் மாநில சட்டமன்றக் கூட்டம் கொந்தளித்தது.

சிறார் மத மாற்றத்திற்கு  தாய், தந்தை (IBU dan BAPA) இருவரின் ஒப்புதலும் வேண்டும் என்று முன்பு அரசியலமைப்பு சட்டம்  கூறுகின்ற நிலையில் இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவின் தாய், தந்தை ஒருவரின் சம்மதம் பெற்றாலே போதுமானது என கூறப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை அமைத்து ஓராண்டுகளை மட்டுமே கடந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்களின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டிய தருணத்தில் இதுபோன்ற இனங்களுக்கிடையிலான மன கசப்பையும் வேறுபாட்டையும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏன் நேரிட்டது?

மத மாற்ற விவகாரத்தை கையில் எடுத்தால் அது பிற சமூகத்தினரிடையே அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி விடும் என்பதை அறிந்திருந்தும் அதனை சட்டமாக அமல்படுத்த முற்படுவது ‘கொளுத்த யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமமாக உள்ளது.

முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் பிள்ளைகள் தந்தையின் தன்னிச்சையான செயலால் மதமாற்றம் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கிய நிலையில் இப்போது சிறார் மதமாற்ற விவகாரத்திற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் சாரி அவசரம் காட்டுவது பக்காத்தான் ஹராப்பானுக்கே ஆபத்தானதாக முடிந்து விடும்.
மலேசியர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தி நாட்டை வளப்பமான சூழலுக்குக் கொண்டுச் செல்வதை தவிர்த்து இன ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கி விட்டு அதில் குளிர் காய பக்காத்தான் ஹராப்பான் முனையக்கூடாது. அது மக்களுக்கும் நல்லதல்ல; ஆளும் அரசாங்கத்திற்கும் நல்லதல்ல.

No comments:

Post a Comment