Tuesday 27 August 2019

‘தெலுங்கன்’ என்பதால் பந்தாடலாமா? தமிழ் நாளிதழின் ஊடக தர்மத்தை கேள்வி எழுப்பினார் கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தான் ஒரு ‘தெலுங்கன்’ என்பதால் தம் மீது தொடர்ந்து பல்வேறு அவதூறுகளை பரப்பி வரும் தமிழ் நாளிதழ் ஒன்றை (பெயர் குறிப்பிடவில்லை) கடிந்து கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், ஊடக தர்மத்தை மீறி செயல்படலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக தாம் பதவியேற்றது முதல் எவ்வித இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினருக்கும் உரிய சேவையை வழங்கி வருகின்றேன்.

ஆனால், தாம் ஒரு ‘தெலுங்கு’ வம்சாவளியைச் சேர்ந்ததாலும் சம்பந்தப்பட்ட நாளிதழ் தரப்பினர் சார்ந்த சாதியையும் சாராததாலும் தம்மீது தொடர்ந்து அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் திணிக்கப்படுகின்றன.

எத்தரப்பையும் சார்ந்திராமல் நடுநிலை போக்கோடு செயல்பட வேண்டியதே ஓர் ஊடகத்தின் அடிப்படை தர்மமாகும். ஆனால், சில தரப்பினர் மீதான விசுவாசத்தை புலப்படுத்துவதற்காக தம் மீது புழுதி வாரி தூற்றும் செயலையே அந்நாளிதழ் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் அந்நாளிதழின் ஊடக தர்மமா?

ஏழை மாணவர்களுக்கான உதவிகள், ஆலயங்களுக்கான மானிய ஒதுக்கீடு, தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவித் திட்டம் என பல்வேறு சேவைகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.

நான் செய்யும் சேவைகளை பிரசுரிக்க தயக்கம் காட்டும் அந்நாளிதழ், தம்மீது குற்றம் காண்பதிலும் அவதூறு பரப்புவதிலும் மட்டுமே முனைப்பு காட்டுகிறது.

தாம் ‘தெலுங்கன்’ என்ற போதிலும் பிறரை புறந்தள்ளி தள்ளி வைத்ததில்லை. சேவை என்று வரும்போது அனைவரையும் சமமாகவே கருதுகிறேன். இதில் எவ்வித பாகுபாட்டையும் காட்டியது இல்லை என்று கணபதிராவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment