Tuesday 6 August 2019

காட்' அமலாக்கம்; அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? கணபதிராவ் கேள்வி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தமிழ்,சீனப்பள்ளிகளில்  அடுத்தாண்டு முதல் 4ஆம்  ஆண்டு மாணவர்களுக்கு தேசிய மொழி பாடத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'காட்' எனப்படும் அரபு சித்திர மொழி பாடத்திட்டம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? என்பதை கல்வி அமைச்சர் விவரிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

இத்திட்ட அமலாக்கம் குறித்து எந்தவொரு தரப்பினரிடமும் கலந்தாலோசிக்காமல்  முஸ்லீம் அல்லாத மாணவர்களிடையே அரபு சித்திர மொழியை வலிந்து திணிப்பதில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஏன் இவ்வளவு மும்முரம் காட்ட வேண்டும்?

தேசியப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் அரபு சித்திர மொழியை முஸ்லீம் அல்லாத மாணவர்களிடையே திணிக்கப்படுவதால் அது அவர்களின் கல்விச் சூழலை இன்னும் சுமையானதாக மாற்றிவிடும்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.ஐசெர்ட் ஒப்பந்தம், டோல் அகற்றம், பிடிபிடிஎன் கடனுதவி தள்ளுபடி போன்ற பல வாக்குறுதிகள் நிலுவையில் உள்ள நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையிலே இல்லாத திட்டத்தை அமல்படுத்த அவசரம் காட்டப்படுவது ஏன்?

'காட்' அமலாக்கம் தொடர்பில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும். கல்வி அமைச்சர் எனும் நிலையில் ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் முன்னர் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளுக்கும் அமைச்சர் மஸ்லீ மாலேக் செவி சாய்க்க வேண்டும்.

அமைச்சர் எனும் நிலையில் ஒரு மலேசியராகவே தாங்கள் கருதப்படும் நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அனைத்து இன மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பள்ளி மாணவர்களின் காலணி, காலுறைகளை மாற்றி விடுவதால் மட்டும் எவ்வித பயனும் அமைந்து விடாது. அதை விட ஆக்ககரமான திட்டத்தை முன்னெடுப்பதில் கல்வி அமைச்சு தீவிரம் காட்ட வேண்டும்.

இந்தியர், சீனர் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள 'காட்' மொழி அமலாக்கத்திற்கு மிகச் சிறந்த முறையில் தீர்வு காண கல்வி அமைச்சர் முனைய வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment