Tuesday 21 November 2017

படிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும்தான்.....

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கல்வி சிறந்து விளங்க புத்தகங்களை படிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல; பெற்றோரும் தான். ஏனெனில் மாணவர்களை ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்துகின்ற நன்னெறி பண்பு பெற்றோரிடம்  இருந்தால்தான் மாணவர்கள் 'சாதனையாளராக' உருவெடுப்பர் என மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி வலியுறுத்தினார்.
தங்களது பிள்ளைகள் சாதனையாளராக உருவெடுக்க வேண்டும் என்பதையே அனைத்து பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால் அதனை சாத்தியப்படுத்த பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன.
மாணவர்களை படி.. படி.. என அனைத்து பெற்றோரும் வலியுறுத்துகின்றனர். இங்கு படிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் தான். மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களை பயின்று அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில் பெற்றோடும் நடைமுறை வாழ்வியல் கூறுகளை விவரிக்கும் தகவல் சுடர் புத்தகங்களை பயில வேண்டும்.

ஒரு குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவது, பிள்ளைகளுக்கு போதிக்கப்பட வேண்டியது என்ன, அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்,  பிள்ளைகளின் எத்தகைய தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற தகவல்களை உணர்ந்து அதனை செயல்படுத்தினாலே நமது பிள்ளைகள் சாதனையாளர்களாக உருவெடுப்பர்.
கல்வி என்று வரும்போது படி... படி... என பிள்ளைகளை வலியுறுத்தும் பெற்றோரும் தங்களது பிள்ளைகளுடன் இணைந்து பயில் ஆரம்பித்தால் அந்த குடும்பமே ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாறும் என சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையின் 'சாதனையாளர் விருது 2017' நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி எஸ்.சாந்தகுமாரி, பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, பள்ளி அறங்காவலர் அமுசு.பெ.விவேகானந்தன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பள்ளி பெ.ஆ.சங்க பொருளாளர் நாகேந்திரன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment