Saturday 18 November 2017

'சம்போங் பாயார்' சட்டப்படி குற்றமாகும்- டத்தோஶ்ரீ ஸாயிட்

கோலாலம்பூர்-
'சம்போங் பாயார்'' (Sambung Bayar) எனும் பெயரில் வங்கி அனுமதியின்றி தங்களது வாகனங்களை மூன்றாம் தரப்பினரிடம் அடமானம் வைக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம்  அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கை 1967ஆம் ஆண்டு வாடகை விற்பனை சட்டத்தை மீறுவதாகும் என குறிப்பிட்ட அவர், வாகனங்களின் கடனை மற்றொருவர் செலுத்துவது, அடமானம் வைப்பது ஆகியவை சட்டத்தை மீறுவதற்கு ஒப்பானதாகும். இச்சட்டம் உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர், கூட்டுறவு அமைச்சின் அதிகாரத்தின் கீழ் உள்ளது என அவர் சொன்னார்.

வங்கியில் மாதக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மற்றவர்களிடம் அடமானம் வைப்பது, மற்றவர்களை வங்கியில் கடனை தொடர சொல்வது முதலான விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சிற்கு தெரியும்.

 காரின் அசல் உரிமையாளர்களிடமிருந்து கார் அடமானமாக பெறுபவர்கள் அல்லது மாதாந்திர கடனை செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் வங்கியில் அக்கடனை தொடராத போதுதான் இந்த பிரச்னை எழுகிறது. இதனால், அக்காரின் அசல் உரிமையாளரின் பெயர் கறுப்புப் பட்டியலில் இடம்பெறுவதற்கான சூழல் ஏற்படுகிறது  என வாகன திட்டங்கள் மோசடி குறித்து சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment