Wednesday 1 July 2020

இந்தியர் விவகாரங்களில் நேரடி கவனம்; மஇகாவை புறக்கணிக்கிறாரா டத்தோஶ்ரீ அஸுமு?

ரா.தங்கமணி

ஈப்போ-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக விளங்கும்  மஇகாவை புறக்கணிக்கும் படலத்தை பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் ஃபைசால் அஸுமு முன்னெடுக்கின்றாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

பேரா மாநிலத்திலுள்ள ஆலய விவகாரங்கள் இனி தன்னுடைய நேரடி பார்வைக்குக் கொண்டு வரப்படுவதோடு ஆலயத்திற்கான மானியங்களை இனி மந்திரி பெசார் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று டத்தோஶ்ரீ அஸுமு பைசால் அறிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆலய விவகாரங்கள் மட்டுமல்லாது இந்தியர் விவகாரங்களையும் இனி மந்திரி பெசாரே நேரடியாக கவனித்துக் கொள்வார் என்றால் ஒரே  கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இந்தியர்களை பிரதிநிதிக்கும் தாய்க்கட்சியான மஇகாவை மந்திரி பெசார் மதிக்கவில்லை என்பது இதன்வழி புலப்படுகிறது.

தாம் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் ஆலய விவகாரங்களை நேரடியாக கவனிப்பேன் என கூறியுள்ள டத்தோஶ்ரீ அஸுமு பைசாலின் நல்லெண்ணத்தை ஆதரிக்கலாம். ஆனால் அதன் பின்னால் மறைந்துள்ள பல விவகாரங்களை ஆராயமால் கண்மூடித்தனமான அறிவிப்புகள் ஆபத்தில் முடியும் என்பதை டத்தோஶ்ரீ அஸுமு உணர வேண்டும்.

ஆலய விவகாரங்களை நேரடியாக கவனிக்கப்படும் என்றால் மந்திரி பெசாரே இனி இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு நேரடி வருகை புரிவாரா? அல்லது ஆலயங்களில் நிலவும் பிரச்சினைகளைதான் நேரடியாக களமிறங்கி கவனிப்பாரா? என்பதை விவரிக்க வேண்டும்.

இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களான ஆலயங்கள் யாவும் சமயம் சார்ந்த விவகாரங்களை உள்ளடக்கியவையாகும். அதுவும் இங்குள்ள பெரும்பாலான ஆலயங்கள் நிலம், கட்டமைப்பு, பண பலம், நிர்வாகப் போராட்டம் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன.

2018க்கு முன்பு வரை மாநில அரசில் ஆலோசகராக பதவி வகித்த மஇகா ஆலயப் பிரச்சினைகளை நேரடியாக களமிறங்கி தீர்வு கண்டதோடு மானியங்களையும் வழங்கின. 2018க்கு பிறகு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்தியர்களை பிரதிநிதித்த இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவு ஆலயங்களுக்கான மானியத்தை முறையாக வழங்கவில்லையெனில் கண்டிக்க வேண்டியது முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரைத்தானே தவிர  மஇகாவை அல்ல.

மாநில மந்திரி பெசார் எனும் நிலையில் நிதி, பாதுகாப்பு, நிலம், இயற்கை வளம், பொருளாதார திட்டமிடல், அரசாங்கத்துடன் சார்பு நிறுவனங்கள் (ஜி.எல்.சி) மற்றும் தேசிய ஒற்றுமை துறை என  ஏற்கெனவே பல பொறுப்புகளை டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு பொறுப்பேற்றிருக்கும்போது இந்த கூடுதல் பொறுப்பு ஏற்புடையதாகுமா?

அதோடு மந்திரி பெசாரே இவற்றை நேரடியாக கவனிப்பாரா? அல்லது இதற்காக சிறப்புக் குழுவையோ தனிநபர்களையோ நியமிப்பாரா? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு தனிநபரையோ ஒரு குழுவையோ நியமிக்க முடியாமானால் அந்த பொறுப்பு ஏன் மஇகாவிடம் வழங்கப்படவில்லை? கிளை, தொகுதி, மாநிலம், மத்திய செயலவை  என்று ஒரு கட்டுக்கோப்பான தலைமையின்கீழ் செயல்படும் மஇகாவை நம்பாத டத்தோஶ்ரீ அஸுமு எவ்வாறு ஒரு சிறு குழுவை நம்புகிறார்?

ஏதேனும் ஆலய விவகாரம் தலைதூக்கினால் முன்பு மஇகாவை தூற்றிய விரல்கள் அனைத்தும் மந்திரி பெசாரையோ, சிறு குழுவையோ நோக்கி நீளும்போது தாக்கு பிடித்து களத்தில் நிற்பார்களா? என்பதும் விவரிக்கப்பட வேண்டும்.

ஆலய விவகாரங்களை மஇகாவும் இந்திய பிரதிநிதியும் கையாளும் போதே பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இப்போது மந்திரி பெசாரே அவற்றை நேரடியாக கவனிக்கும்போது இப்பிரச்சினைகள் மதம் சார்ந்த விவகாரமாக உருவெடுத்தால் அப்போது மந்திரி பெசாரின் நிலைப்பாடு எங்கு, யார் பக்கம் இருக்கும்? என்பதும் விவரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்விவகாரத்தில் மஇகாவும் தனது நிலைப்பாட்டை விவரிக்க வேண்டும். தம்முடைய  பதவிகள் யாவும் பறிக்கப்படுவதை மஇகா வேடிக்கை பார்க்குமானால் வரும் காலத்தில் மஇகா இன்னும் அதிகமாக புறக்கணிக்கப்படும் சாத்தியம் உள்ளதை உணர்ந்து இப்போதே தன்னை சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment