Tuesday 21 July 2020

உழைப்பால் உயரம் தொட்ட டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்

ரா.தங்கமணி

"'மகிழ்ச்சி''.... கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சரித்த இந்த வாசகம் அன்றைய காலகட்டத்தில்பெரும் புகழை அடைந்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொன்னதை காட்டிலும் பல மடங்கு தன்வாழ்நாளில் ''மகிழ்ச்சி'' எனும் வார்த்தையை அன்றாடம் உச்சரிக்கும் வேதச் சொல்லாக கொண்டிருக்கிறார் தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஏ.கே.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.கே.சக்திவேல்.
உழைப்பு மட்டுமே ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான அடிப்படையான ஆணிவேர் என்பதை தனது உழைப்பின் மூலம் வெற்றி சிகரத்தை தொட்டுள்ளார் ஈப்போவைச் சேர்ந்த டத்தோஶ்ரீ சக்திவேல்.

சுங்கை சிப்புட் சந்தைப் பகுதியில் காய்கறி விற்பனையாளராக தனது வியாபார தளத்தை தொடங்கிய சக்திவேல், இன்று அடைந்திருக்கும் உயரம் பிறரை வியப்படையச் செய்துள்ளது. காய்கறி விற்பனையை தொடங்கி செய்துக் கொண்டிருக்கும்போதே இது மட்டுமே தனது மைல்கல் அல்ல என்பதை உணர்ந்து உணவு விநியோக (Food Catering) தொழிலையும் மேற்கொண்டார்.
திருமணங்களுக்கு உணவு விநியோகச் சேவையை மேற்கொண்ட டத்தோஶ்ரீ சக்திவேல், பின்னர் மண்டப அலங்காரச் சேவை (Wedding Decoration) முன்னெடுத்து செயல்படுத்தினார். இதன் மூலம் திருமண ஜோடிகள் விரும்பும் வகையில்  பலவிதமான டிசைன்களின் மண்டப அலங்காரச் சேவையிலும் கால் பதித்தார்.

இது மட்டுமல்லாது, மண்டப அலங்காரம், உணவு விநியோகச் சேவையை மட்டும் வழங்கினால் போதாது. திருமண வைபவத்தை முன்னிட்டு தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து  சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வகையில் ஶ்ரீ ஏ.கே.எஸ். மண்டபத்தை நிர்மாணித்து திருமணம், கலைவிழா, பொது கூட்டம் என அனைவருக்கும் தனது சாதனையில் வாசலை திறந்துள்ளார்.
காலம் எப்போதும் நின்றுக் கொண்டிருப்பதில்லை. காலவோட்டத்தின் மாறுதலுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்பவர்களே சாதிக்க முடியும் என்பதால் அந்த மாற்றத்தை தனது தொழில்துறையிலும்  கடைபிடித்து வந்தேன். அதன் பலனையே இன்று எனது வெற்றியாக சுவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தனது அனுபவங்களை விவரிக்கிறார் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்.

இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடும் "மகிழ்ச்சி" நாயகன் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேலுக்கு  "பாரதம்இணைய ஊடகம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment