ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
பேரா மாநிலத்திலுள்ள இந்தியர்களின் பிரச்சினைகள் தனது நேரடி கவனத்தின் கீழ் கவனிக்கப்படும் என்ற மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ பைசால் அஸுமுவின் அறிவிப்பு வாதத்திற்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது என்று சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.
மாநில மந்திரி பெசார் எனும் நிலையில் ஏற்கெனவே பல பொறுப்புகளை சுமக்க வேண்டிய கடப்பாட்டில் டத்தோஸ்ரீ பைசால் உள்ளார். அது மட்டுமல்லாது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.
இவ்வளவு பொறுப்புகளுக்கு மத்தியில் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளையும் நேரடியாக கவனிப்பேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஒரு மந்திரி பெசார் எனும் முறையில் அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்வதை வரவேற்கிறோம். அதற்காக பின்விளைவுகளை ஆராயாமல் கண்மூடித்தனமாக ஆதரிக்க மாட்டோம்.
இந்திய சமுதாயத்தின் பிரச்சினையை இந்தியர்களைச் சார்ந்துள்ள கட்சி பிரதிநிதிகள்ள முன்னெடுக்கும் வேளையில் அதன் பிரதிபலன் சிறப்பானதாக அமையக்கூடும்.
2008 பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்கள் தோல்வி கண்ட நிலையில் சிறப்பு ஆலோசகர், சட்டமன்ற சபாநாயகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளை மஇகா பிரதிநிதிகளுக்கு வழங்கியது அன்றைய மாநில தேசிய முன்னணி அரசு.
அதே நடைமுறையை இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசு பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?
இந்திய சமுதாயத்தைச் சார்ந்து பல கட்சிகள் உள்ள சூழலில்
சிறப்பு ஆலோசகர் பதவியை எந்த கட்சியை சார்ந்தவருக்கு வழங்குவது என்ற குழப்பம் டத்தோஸ்ரீ அஸுமுவுக்கு தேவையில்லை.
மத்திய அரசாங்கக் கூட்டணியில் மஇகா பிரதிநிதிக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு ஆலோசகர் பதவியை மஇகா பிரதிநிதிக்கு வழங்குவதில் தீவிரமாக யோசிக்க வேண்டாம்.
சிறப்பு ஆலோசகர் பதவியை மஇகா பிரதிநிதிக்கு வழங்குவதற்கு காலதாமதம் செய்யாமல் கூடிய விரைவில் வழங்குவதற்கு டத்தோஸ்ரீ பைசால் அஸுமு முன்வர வேண்டும் என்று மணிமாறன் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment