Wednesday 8 July 2020

தேர்தல் காலத்தில் மட்டும்தான் மக்கள் பிரச்சினைகள் கிளறப்படுமா?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

தேர்தல் களம் நெருங்கும் போதெல்லாம்  ஏதேனும் ஒரு பிரச்சினையை கிளறி விட்டு அதில் குளிர் காய்வதே சிலரின் வாடிக்கையாகி விட்டது.

அவ்வகையில் இப்போது அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பது சுங்கை சிப்புட், தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு வளாகமாகும்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு துன் ச.சாமிவேலு இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது கேபிஜே கழகத்தின் வழி நிர்மாணிக்கப்பட்டது இந்த குடியிருப்புப் பகுதி.

பெரும்பாலும் இந்தியர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் வீடமைப்பு மேம்பாட்டின்போது ஆலயம், சூராவ், சந்தைப்பகுதி, காவல் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய நில ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிலையில் வாக்குறுதி அளித்ததைபோல் அங்கு மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்கள் நிர்மாணிக்கப்படாமல் அந்நிலங்கள் சில நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2004ஆம் ஆண்டிலேயே இந்நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

2004ஆம் ஆண்டே விற்கப்பட்டதாக சொல்லப்படும் நில விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் தொகுதி மஇகா முன்னாள் தலைவர் லோகநாதன், Pertubuhan Penaraju Insan  இயக்கத்தின் வழியும்  திருமதி இந்திராணி ஆகியோர் இப்போது கேள்வி எழுப்புவதன் அவசியம் என்ன? என்று உள்ளூர்வாசிகள் கேட்கின்றனர்.

திடீரென இப்போது மட்டும் தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரம் வெடிப்பதற்கான அடிப்படை காரணம் என்ன? என்பதையும் அறியாதவர்களாக இங்குள்ள மக்கள் இல்லை.

பொதுத் தேர்தல் விவகாரம் சூடு பிடிக்கும் காலகட்டத்தில் மட்டும் துன் சாமிவேலுவை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள், நில விவகாரங்களை  தொட்டு கேள்வி எழுப்புவது ஏன்?

தாமான் துன் சம்பந்தனில் ஆலயம், சூராவ், சந்தை, காவல் நிலையம் என போராடும் இத்தரப்பினர் அதே சுங்கை சிப்புட் வட்டாரத்தில் கம்போங் பெங்காளி, சிங் சோங் மேடு குடியிருப்புப் பகுதி உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் நில விவகாரம், இளையோருக்கான வேலை வாய்ப்பின்மை போன்றவற்றுக்கு எப்போதாவது போராடியுள்ளார்களா?

மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காக குரல் எழுப்புவதாக இருந்தால் அனைத்து விவகாரத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர தனிநபர் மீதான தாக்குதலாகவும் அதன் பின்னால் மறைந்திருக்கும் சுயநலப்போக்காகவும் இருக்கக்கூடாது.

தனிநபர் போராட்டம் எதை நோக்கி உள்ளது என்பதை அறியாத அளவுக்கு சுங்கை சிப்புட் மக்கள் இன்னமும் இளிச்சவாயர்கள் கிடையாது. படித்தவர்களும் விவரம் அறிந்தவர்களும் இம்மண்ணில் அதிகரித்துள்ளனர் என்பதை உணர்ந்து சுயநலப் போக்கை 'மக்களின் சேவை' என இனியும்  சொல்லிக் கொள்ள வேண்டாம் என உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டனர்.

தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பும் அதை சுற்றி நடத்தப்படும் அரசியல் நாடகமும் இனி விரிவான அலசலாக 'பாரதம்' இணையதளத்தில் இடம்பெறும்.

No comments:

Post a Comment