Wednesday 15 July 2020

பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்

ரா.தங்கமணி

காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

இப்போது வரை தமிழ்நாடு ஒருவரின் ஆட்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தான். எப்போது தேர்தல் வந்தாலும் காமராஜர் ஆட்சியை வழங்கும் என்ற கட்சிகளின் வாக்குறுதிகளிலே நமக்கு தெரிந்து விடும் காமராஜர் ஆட்சி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று.

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர் பிற தலைவர்களை போல் எளிதில் கடந்து விட முடியாது. தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1953ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தின் பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பியதனால் செல்வாக்கு குறைந்த ராஜாஜி தனது பதவியிலிருந்து விலகினார். ஆனால் தனது பதவிக்கு சி.சுப்பிரமணியத்தை ராஜாஜி முன்னிறுத்திய போதிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் 1953இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர்.

முதல்வராக பதவியேற்றவுடன் முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். 17,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்ததோடு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தி ஏழை மக்களிடையே கல்வி முன்னேற்றத்தையும் ஏற்படுத்தினார்.இதனாலேயே கல்வி கண் திறந்த காமராஜர் என்ற புகழாரமும் பெற்றார்.

காமராஜர் தன்னுடைய அமைச்சரவையை அனைவரும் வியக்கும்படி அமைத்திருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கியிருந்தார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் அப்பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, டில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் செகசீகன்ராம், எஸ்.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் கிங் மேக்கர் என்று புகழக்கூடிய காமராஜர் இந்திய நாட்டின் இரு பிரதமர்களை உருவாக்கிய பெருமையையும் பெற்றிருந்தார். 

1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயதே நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின்  புதிய பிரதமராகவும் உருவாக்கினார் காமராஜர்.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த காமராஜர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் உட்பட 150 ரூபாய் மட்டுமே.

அரசியல் தடத்தில் தனக்கென ஒரு வரலாற்றை படைத்து இன்றளவும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்  1903 ஜூலை 15இல் பிறந்து 1975, அக்டோபர் 2ஆம் தேதி மறைந்தார்.

நிர்வாகத் திறன், நேர்மை, உழைப்பு, உறுதி,தொலைநோக்குச் சிந்தனை என்று பொற்கால ஆட்சியை வழங்கிச் சென்ற காமராஜரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மனதில் நிறுத்தி தலை வணங்கி வாழ்த்துவோம்.



No comments:

Post a Comment