ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான் ஊழல் வழக்கு விசாரணையின் தீர்ப்பின்போது திரண்ட ஆதரவாளர்கள் கோவிட்-19 பரவல் அச்சம் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் டத்தோஶ்ரீ நஜிப் தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல் முறைகேடு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர்.
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியும் பலரும் அதனை பின்பற்ற தவறியுள்ளனர்.
இக்கூட்டத்தில் திரண்ட ஆதரவாளர்களிடையே சுய ஒழுக்கம் இல்லாதது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குன் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தனது கவலையை தெரிவித்தார்.
நாட்டில் ஏற்கெனவே கோவிட்-19 பாதிப்பு மீண்டு அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் மீண்டும் கோவிட்-19 அச்சம் நாட்டு மக்களிடையே தலை தூக்க தொடங்கியுள்ளது.
தற்போது இரண்டு இலக்கமாக இருக்கும் கோவிட்-19 பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக எட்டினால் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) மீண்டும் அமலாக்கம் செய்யப்படும் என்று முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பெரும் திரளாக திரண்ட நஜிப்பின் ஆதரவாளர்களால் கோவிட்-19 பரவல் அதிகரிக்குமா? மீண்டும் எம்சிஓ அமலாக்கம் காணுமா? என்ற பீதி மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ளதை சமூக ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது.
No comments:
Post a Comment