Sunday 21 April 2019

மெட்ரிக்குலேஷன்; இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என்ன? - கமலநாதன் கேள்வி

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் இவ்வாண்டு எத்தனை இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை கல்வி அமைச்சு வெளியிட தயக்கம் காட்டுவது ஏன்? என்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கேள்வி எழுப்பினார்.

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின்போது இந்திய மாணவர்களுக்காக 2,200 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்கள் யாவும் இந்திய சமுதாயத்திற்காக தேமு அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களில் ஒன்றாகும்.

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்படாத பூமிபுத்ரா இடங்களையே இந்தியர், சீனர்களுக்கு வழங்கியதாக கூறப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பூமிபுத்ரா இடங்களை கொண்டு இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் முன்பு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அரசாங்கக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் இந்திய சமுதாயத்திற்கு 2,200 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டது.

தகுதி வாய்ந்த இந்திய மாணவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கில் 105இல் தொடங்கிய மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 2,200 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால் இன்றைய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் எத்தனை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற விவரத்தை பொதுவில் வெளியிட தயக்கம் காட்டுவது?

மெட்ரிக்குலேஷன் பயில எத்தனை இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்ற விவரத்தை கல்வி துணை அமைச்சர், அல்லது இந்திய அமைச்சர்கள் பொதுவில் அறிவிக்க வேண்டும். 

அதோடு மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அதன் நகலை எங்களிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஇகா கல்வி பிரிவு தலைவருமான டத்தோ கமலநாதன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment