Wednesday 24 April 2019

பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் - அமைச்சர் வேதமூர்த்தி

புத்ராஜெயா-
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று மாநாட்டுத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி  தெரிவித்தார்.

இவற்றில் பூர்வ குடிமக்களின் பாரம்பரிய நிலம்,  கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தலைமைத்துவம், அடிப்படை கட்டமைப்பு, பண்பாடு ஆகிய ஏழு அம்சங்கள் குறித்த தீர்மானங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

நிலம் குறித்த தீர்மானத்தில், பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நிலம், 134ஆவது சட்டம் அல்லது நாட்டின்  நிலக் குறியீட்டின் அடிப்படையில் அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என்பது ஒரு மைல்கல் தீர்மானம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தவிர, பூர்வகுடி சமுதாயத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலான நிலமும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல கல்வித் தீர்மானத்தைப் பொறுத்தவரை, பூர்வகுடி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பால்ய வயதில் மணம் முடிப்பதைக் காட்டிலும் அவர்களின் கல்வி மேம்பாட்டில் அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சுகாதார பாதுகாப்பிற்காக, சுகாதாரத் துறை, பூர்வகுடி மேம்பாட்டுப் பிரிவு (JAKOA), பூர்வகுடி பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பு கொண்ட சுகாதார செயற்குழு அமைக்கப்படும். பொருளாதாரம் குறித்த தீர்மானத்தில், பூர்வகுடி தொழில்  முனைவோர் வங்கிக் கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூர்வகுடியினர் தங்களின் வட்டாரப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சரவாக் மாநிலத்தில் உள்ள நடைமுறையைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதைப்போல, பூர்வகுடி இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும்  கலைஞர்களின் வளர்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்கும்படி மற்றொரு தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விவரித்தார்.
முன்னதாக காலையில் மாநாடு தொடங்கியபோது தேசிய ஒற்றுமை, சமூல நல அமைச்சருமான பொன். வேதமூர்த்தியின்  வரவேற்புரை, பூர்வகுடி சமூகத் தலைவர் முகமது பின் நோகிங் உரையைத் தொடர்ந்து பிரதமர் துன் மகாதீர் தலைமை உரை ஆற்றினார்.

பிற்பகலில் குழு அடிப்படையிலான கருத்தரங்குகள் நடைபெற்றன. நேற்று ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பூர்வகுடி சமூகத்தின் வட்டாரத்  தலைவர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பினர் என ஏறக்குறைய 1,200 பேர் கலந்து கொண்டனர். பூர்வகுடி சமூகத்தில் இருந்து ஏராளமான பெண்களும் இந்த முழுநாள் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment