Wednesday 25 July 2018

'மாயாஜால வித்தை'யில் விருதுகளை குவிக்கும் மார்க் அரோன் தாஸ்


நேர்காணல் : ரா.தங்கமணி

ஈப்போ-
மாயாஜால வித்தை (Magic) என்றாலே அனைவருக்கும் ஒருவித சந்தோஷம் தானாகவே உருவாகி விடும். தன் கண் முன்னே நடப்பவை எல்லாம் உண்மைதானா? என்ற சிறு குழப்பத்துடனே நம்மை ஆச்சரியத்துடன் ரசிக்க வைக்கும் கலையே மாயாஜால வித்தையாகும்.

சிறு நிகழ்ச்சி முதல் திரைப்படங்கள் வரை 'மேஜிக்' என்றாலே அதன் மீது தனி கவனம் ஏற்பட்டு விடும். தமிழ்ப்படங்கள் தொடங்கி ஆங்கில திரைப்படங்கள் வரை காட்சிபடுத்தப்படும் மாயாஜால வித்தைகள் ரசனைக்குரியதாகும்.

ஆனால் நிஜத்தில் மாயாஜால வித்தைகளை அரங்கேற்றும் மாயாஜால வித்தகர்களின்  எண்ணிக்கை பெருமளவு குறைவுதான். இக்கலையின் மீது ரசனை இருந்தாலும் அதில் ஈடுபாடு 
கொண்டவர்கள் சிலரே ஆவர்.

அவ்வகையில் மாயாஜால வித்தையை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரங்கேற்றி பல விருதுகளை வாங்கியுள்ள மார்க் அரோன் தாஸ் நிச்சயம் பாராட்டுக்குரியவர் ஆவார்.

பேராக், புந்தோங்கைச் சேர்ந்த மார்க் அரோன் தாஸ், அண்மையில் தெலுங்கானா, ஹைதராபாத்தில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் மாயாஜால வித்தைக்காக 2 விருதுகளை வென்றுள்ளார்.

மார்க் அரோன் தாஸுடன் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

கே: மேஜிக் துறையில் ஈடுபடும் ஆர்வம் எவ்வாறு வந்தது?

ப: 20 வயதிலிருந்தே பல்வேறு கலைத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளேன். நடனக் கலைஞர், கோமாளி (Clown) ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்தேன். அச்சமயம் மாயாஜால வித்தைகளை கற்றுக் கொள்ளும் எண்ணம் வந்தது. அதனை முறையாக கற்று பல நிகழ்வுகளில் மாயாஜால வித்தைகளை அரங்கேற்றி வருகிறேன்.

கே: எத்தகைய நிகழ்ச்சிகளில் மேஜிக் கலையை அரங்கேற்றுவீர்கள்?

ப: பொதுவான நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மேஜிக் கலையை அரங்கேற்றலாம். பெரும்பாலும் திருமணம், பிறந்தநாள், திருவிழா நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது மக்கள் ஒன்றுகூடும் பொது நிகழ்ச்சிகளில் கூட மாயாஜால வித்தையை அரங்கேற்றி வருகிறேன்.


கே: மேஜிக் துறையில் உங்களது சிறப்பு அம்சம்?

ப: மாயாஜால வித்தையில் பல சிறப்புகள் உள்ளன. ஆனால் புறாவை பயன்படுத்தி நான் செய்யும் வித்தைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதற்காகவே ஒரு நிகழ்ச்சி படைப்பின்போது 'புறா மன்னன்' என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கே: மாயாஜால துறையில் நமது இந்தியர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

ப: மேஜிக் துறையில் முன்பு உள்ளதை விட இப்போது அதிகமானோர் அதில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள பலர் தங்களது திறமையை வெளிபடுத்தி கொண்டு வருகின்றனர். 
ஆனால் 'மேஜிக்' துறையை கற்றுக் கொண்டு உளப்பூர்வமாக செய்ய வேண்டும். ஏனெனில் மேஜிக் வித்தையை பார்க்கும் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே முதல் வேலை. அதனை சரியாக செய்தால் தான் மக்கள் மத்தியில் நிலைபெற முடியும்.
கே: இத்துறையில் உங்களுக்கு துணையாக இருப்பது?

ப: இத்துறையில் நான் வெற்றி எனக்கு உறுதுணையாக இருப்பவர் எனது மனைவி திருமதி மங்களநாயகி. என்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கு  தேவையான ஏற்பாடுகளை செய்து வைப்பதோடு அதனை சிறப்பாக வழிநடத்திடவும் உறுதுணையாக இருக்கின்றார்.

கே: நீங்கள் கற்றுக் கொண்ட வித்தையை பிறருக்கு சொல்லி கொடுப்பதுண்டா?

ப: இன்னும் சொல்லிக் கொடுக்கவில்லை. இத்துறையில் இன்னும் நான் கற்றுக் கொள்ள அதிகம்  உள்ளது. கொஞ்சமாக கற்றுக் கொண்டு எனக்கு தெரிந்த வித்தைகளை வெளிபடுத்தி வருகிறேன். ஆனால் இதில் இன்னும் அதிகமான வித்தைகள் உள்ளன. அதை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் பிறருக்கு கற்றுக் கொடுப்பது நியாயமாகாது என்பதால் தற்போது யாருக்கும் இக்கலையை சொல்லிக் கொடுப்பதில்லை.

கே: 'மேஜிக்' கலையில் நீங்கள் வாங்கியுள்ள விருதுகள்?

ப: மேஜிக் கலையில் ஈடுபட்டபோதெல்லாம் பலர் எனக்கு விருதுகளையும் சிறப்புகளையும் செய்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்னர் 'புறா மன்னன்' விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் கடந்தாண்டு மும்பையில் 'அனைத்துலக விருது' வழங்கப்பட்டது. ஈப்போவில் பிரபலமான தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல் 'Perak 1st Magician' விருது வழங்கி சிறப்பித்தார். 

அதோடு ஜூலை 7,8 ஆகிய இரு தினங்கள் தெலுங்கானா, ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் அனைத்துலக மாயாஜால வித்தகன் (international Magician),  அனைத்துலக கண்கவர் கலைஞர் (International Gala Performer) ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் டத்தோ ஏ.கே. சக்திவேல், KYSS enterprise - Lepak, IDAM Malayasia (Indian Dance association,Perak) ஆகியோரும் பல்வேறு சிறப்புகளை செய்துள்ளனர்.

கே: மேஜிக் துறையில் உங்களது இலக்கு?

ப: மேஜிக் துறையில் ஈடுபட வேண்டும் என துடிக்கும் இளைஞர்களுக்கு அத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கும் மையம் ஒன்றை அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளேன். இப்பயிற்சி மையத்தின் வழி இளைஞர்களை மேஜிக் துறையில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொள்வதோடு அவற்றை முழுமையாகவும் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான  முயற்சியை தற்போது முன்னெடுத்துள்ளேன். கூடிய விரைவில் அந்த இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது.  

மேஜிக் துறையில் இன்னும் பல சாதனைகளை படைப்பதோடு மேஜிக் பயிற்சி மையத்தை அமைக்கும் எண்ணம் ஈடேற மார்க் அரோன் தாஸை 'பாரதம்' மின்னியல் ஊடகம் பாராட்டுகிறது.

மார்க் அரோன் தாஸை தொடர்பு கொள்ள: 014-6017430 

No comments:

Post a Comment