Monday, 30 July 2018

தேசிய பல்நோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் சொத்து மதிப்பு வெ.20 கோடியை எட்டலாம்- செயலாளர் குணசேகரன்


ரா.தங்கமணி

ஈப்போ-
17 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசிய பல்நோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் சொத்து மதிப்பு தற்போது 13 கோடியாக உள்ள நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் 20 கோடி வெள்ளியை எட்டலாம் என அதன் செயலாளர் குணசேகரன் நாச்சியப்பன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களை முன்னிலைபடுத்தி செயல்பட ஆரம்பித்த இக்கூட்டுறவுக் கழகம் தற்போது பல்வேறு முதலீடு, சொத்துடைமைகளிம் வாயிலாக பல கோடி வெள்ளி சொத்துகளை கொண்டுள்ளது

ராஜேந்திரன் வேம்படி தலைமையில் இயங்கும் இக்கூட்டுறவுக் கழகத்தின் மிகப் பெரிய வெற்றியாக கிளந்தான் மாநிலத்தில் 2,012 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு செம்பனை மரம் பயிரிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று
தெமர்லோவில் 275 ஏக்கர் நிலம் உள்ளது.

இதுமட்டுமல்லாது நாடு தழுவிய நிலையில் பல்வேறு சொத்துகளையும் கட்டடங்களையும் கொண்டுள்ள இக்கூட்டுறவுக் கழகம், கடந்த காலங்களில் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவை வழங்கி வந்தது. ஆனால் அதிகளவு லாபம் பெறப்படாததால் உறுப்பினர்களுக்கு கடந்தாண்டை போலவே 5 விழுக்காடு போனஸாக வழங்கப்படும் என இன்று நடைபெற்ற தேசிய பல்நோக்கு கூட்டுறவுக் கழகத்தின் 41ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இக்கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மரண சகாய நிதி, உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதி, கடனுதவி திட்டம், மருத்துவ காப்புறுதி உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

மேலும் இக்கூட்டத்தில் வாரிய இயக்குனர்களாக ராஜலெட்சுமி முருகையா, ராமலிங்கம் பெரியண்ணன், லோகநாதன் மருதமுத்து, சுகுமாறன் துரைசாமி, நாகராஜு சின்னசாமி ஆகியோருடன் மரணமடைந்த ஆறுமுகம் பழனியாண்டிக்கு பதிலாக சுப்பிரமணியம் தண்னீர்மலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கூட்டுறவுக் கழகத்தின்  வாரிய இயக்குனர்களும் ஊறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment