Tuesday 24 July 2018

சிவநேசனை மரியாதை நிமித்தம் சந்தித்தனர் பேரா இந்திய வர்த்தக சபையினர்


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனை பேரா இந்திய வர்த்தக சபையினர் (பிஐசிசி) இன்று அதிகாரப்பூர்வமாக சந்தித்தனர்.

பேரா அரசு செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் மாநில இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிஐசிசி தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் விவரித்தார்.

வர்த்தக வாய்ப்புகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம், விவசாய நில கோரிக்கை, சுற்றுப்பயணிகளை அதிகரிப்பதற்கான விமான தள சீரமைப்பு போன்ற கோரிக்கைகளை சிவநேசனிடம் அவர் முன்வைத்தார்.

இவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவநேசன், மாநில அரசின் வழி இயன்ற உதவிகளை தாம்  வழங்குவதாகவும் வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனிடம் விவரித்துள்ளதாகவும் சொன்னார்.

மேலும், உணவகங்கள் எதிர்நோக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையை கையாள்வதற்கு ஏதுவாக சமையல் கலையை பயிலும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குவதும் இத்துறையில் மாணவர்கள் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என சிவநேசன் சொன்னார்.

இந்நிகழ்வில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் கேசவன், செயலாளர் அசோகன் பிஐசிசி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment