Wednesday 25 July 2018
2,000 ஏக்கர் நில விவகாரம்; தகவலை வழங்க மறுத்தால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்- ஆதி.சிவசுப்பிரமணியம்
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்திற்கான முறையான தகவல்களை ஒப்படைக்க மறுத்தால் இவ்விவகாரம் பிரதமர் துன் மகாதீரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என பேரா மாநில இந்திய விவகாரப் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ள புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இம்மாநிலத்திலுள்ள இந்திய மாணவர்கள், தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்காக 2009இல் அப்போதைய மாநில அரசாங்கம் 2,000 ஏக்கர் நிலத்தை பேரா மாநில இந்திய மாணவர்கள் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திடம் வழங்கியது.
ஆனால் இந்நாள் வரையிலும் அந்த 2,000 ஏக்கர் நிலத்தின் மூலம் தமிழ்ப்பள்ளிகள் அடைந்த நன்மை எதுவுமே இல்லை. இந்நில விவகாரத்தில் என்ன நடந்துள்ளது என்ற தகவலை சம்பந்தப்பட்ட அறிவாரிய உறுப்பினர்கள் உரிய தகவலை வழங்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டிய நிதி தவறாக பயன்படுத்தப்படக்கூடாது எனும் நோக்கில் இது குறித்து கேள்வி எழுப்புவதாக கூறிய சிவசுப்பிரமணியம், சம்பந்தப்பட்ட வாரியக்குழு உறுப்பினர்கள் உரிய தகவலை வழங்க மறுத்தால் பிரதமர் துன் மகாதீரின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டுச் செல்லப்படும்.
இந்திய சமுதாய பிரச்சினைகளை நானே கவனிப்பேன் என பிரதமர் மகாதீர் கூறியிருந்ததன் அடிப்படையில் இவ்விவகாரம் அவரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதோடு காவல் துறையிலும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திலும் (எம்ஏசிசி) புகார் செய்யப்படும் என்றார்.
விபரீதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முன்னர் சுமூகமான முறையில் இவ்விகாரத்தில் தீர்வு காண தாம் தயாராக இருப்பதாகவும் அறவாரிய உறுப்பினர்கள் இதனை உணர்ந்து துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment