Friday 13 July 2018

கொலம்பியா தமிழ்ப்பள்ளி: எலி சிறுநீர் துர்நாற்றத்தால் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் பாதுகாப்பு? - சிவநேசன் எச்சரிக்கை


புனிதா சுகுமாறன்

ஈப்போ
எலிகளின் கழிவுகளாலும்  சிறுநீர்  துர்நாற்றத்தாலும் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஆயர் தாவார், கொலம்பியா தமிழ்ப்பள்ளி சுகாதார ரீதியில் பாதுகாப்பற்ற இடம்  என பேரா சுகாதாரத் துறை  இலாகா உறுதிபடுத்தியுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெளிவுபடுத்தினார்.

100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இப்பள்ளியில் 60 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர், 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.  கடந்த மாதம்  இப்பள்ளிக்கு தாம் வருகை புரிந்தபோது எலி சிறுநீர் நுர்நாற்றத்தால் மூச்சு விட முடியாத அவலநிலையை உணர்ந்தேன். அப்போதே இப்பள்ளியில் நிலை குறித்து ஆராயும்படி சுகாதார இலாகாவை கேட்டுக் கொண்டேன்.

செம்பனை தோட்டம் அமைந்துள்ள இப்பள்ளியில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதோடு பல இடங்களில் துளை போட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மஞ்சோங் மாவட்ட சுகாதார இலாகா எலியின் கழிவுகளாலும் சிறுநீர் துர்நாற்றத்தாலும்  சுகாதார ரீதியில் இப்பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உகந்த இடமல்ல என  ஆய்வறிக்கையை வழங்கியுள்ளது.

எலியின் சிறுநீர் துர்நாற்றத்தால்  மாணவர்களும் ஆசிரியர்களும் சுகாதார ரீதியில் பாதிப்பை எதிர்கொள்ளலாம் என அச்சம் கொள்கிறேன். மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தற்காலிக மாற்று நடவடிக்கையை கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட சிவநேசன், தற்காலிகமாக கொள்கலனை (Container)  பயன்படுத்தி மாணவர்களை படிக்க வைக்கலாம் என அவர் சொன்னார்.

இப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதே சிறந்ததொரு நடவடிக்கையாகும் என குறிப்பிட்ட சிவநேசன், அதற்கு முன் தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதோடு இப்பள்ளிக்கு எதிரே 30 ஆண்டுகளாக மேம்பாடு காணப்படாத நிலம் ஒன்று உள்ளது. இது ம இகாவின் முன்னாள் தலைவர் துன் ச.சாமிவேலுவுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.

இத்தமிழ்ப்பள்ளியின் அபாய நிலையை உணர்ந்து அவர் இப்பள்ளிக்கு சில ஏக்கர் நிலத்தை கொடுத்து உதவலாம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சிவநேசன் இவ்வாறு சொன்னார்.

கொலம்பியா தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் கூடிய விரைவில் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment