Thursday 25 October 2018

தோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே சிறந்த தலைவனாகிறான் - வீ.பொன்ராஜ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அனைவருக்கும் தலைமைத்துவ ஆற்றல் உள்ளது. ஆனால் அறிந்து செயல்படுபவர்களால் மட்டுமே ஒரு தலைவராக உருவாக முடியும். தோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே ஒரு தலைவனாகிறான் என்று இந்தியாவின் முன்னாள் அதிபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வீ.பொன்ராஜ் கூறினார்.

இன்றைய மாணவர்களிடையே தலைமைத்துவ ஆற்றல் நிறைந்து கிடக்கிறது. ஆனால் அந்த ஆற்றலை பலர் உணர்ந்து கொள்வதில்லை. உணர்ந்தவர்களில் சிலர் தோல்வி மனப்பான்மையினால் அதில் வெற்றி கொள்ள முடிவதில்லை.

இந்நிலை மாற வேண்டும் என்றால்  முதலில் 'நான்' யார் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்களில் ஆற்றல், லட்சியம் ஆகியவை குறித்து ஆக்ககரமாக சிந்திக்கும் போது தலைமைத்துவ ஆற்றல் தானாகவே அங்கு வெளிபட தொடங்கும்.

எடுத்த உடனேயே ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதற்காக தோல்வி அடைந்து விட்டால் எடுத்த முயற்சியை கைவிட்டு விடக்கூடாது. ஒரு காரியத்தில் பலமுறை முயற்சி செய்து வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுப்பவனே சிறந்த தலைவன் ஆகிறான். அதே போன்று மாணவர்களும் இப்போது சந்திக்கும் சிறு சிறு தோல்விகளில் மனம் தளர்ந்து விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள்; அதுதான் உங்களை வெற்றி வாசலில் நிலைநிறுத்தும் என்று அண்மையில்  பேரா இந்திய வர்த்தக சபை ஏற்பாட்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, தொழில்முனைவோர்' பயிலரங்கின்போது பொன்ராஜ் தெரிவித்தார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த அமரர் அப்துல் கலாம் ஐயாவின் லட்சியம் அனைத்தும் மாணவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும் என்பதே. அதற்காகத்தான் அவர் தனது வாழ்நாள் கடைசி வரை பாடுபட்டார்.

நாட்டு நடப்பு, உலகச் சூழல் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு தங்களது குடும்பத்தினரின் ஆலோசனைகளை பின்பற்றுபவர்கள் நிச்சயம் தோல்வியை சந்திக்க மாட்டார்கள்.

எத்தகைய சூழலை எதிர்கொள்ளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களாக உங்களால் உருவெடுக்க முடியும்  என்று அவர் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் பேரா இந்திய வர்த்தக சபையின்  தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் உட்பட பிரமுகர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment