Tuesday 16 October 2018
தோல்வி பயத்தில் பொய் பிரச்சாரமா? சட்ட நடவடிக்கை பாயும்- டான்ஶ்ரீ ராமசாமி எச்சரிக்கை
ரா.தங்கமணி
ஈப்போ-
விரைவில் நடைபெறவுள்ள மஇகா தேர்தலில் தோல்வி கண்டு விடுவோம் என்ற பயத்தினாலே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சில தரப்பினர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் என்று தொழிலதிபர் டான்ஶ்ரீ எம்.இராமசாமி தெரிவித்தார்.
கட்சி உருமாற்றம் பெற வேண்டும். இழந்து கிடக்கும் இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே மஇகாவின் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட முனைந்துள்ளேன். ஆனால், என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தி பொய் பிரச்சாரம் செய்ய சில தரப்பினர் முனைந்துள்ளனர்.
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமைத்துவத்தின்போது பேரா மாநில மஇகா தலைவராக நான் நியமனம் செய்யப்பட்டேன்.
இக்காலகட்டத்தின்போது கட்சியின் பணம் 7 லட்சம் வெள்ளியை வேறொரு வங்கியின் டெபாசிட் செய்து அதிக லாப ஈவு பெறுவதற்கு வழிவகை செய்தேன். ஆனால் அந்த பணம் மாயமாகி விட்டதாக சில தரப்பினர் இப்போது பிரச்சாரம் செய்து வருவதாக கேள்விபட்டேன்.
என்னுடைய தலைமைத்துவத்தின்போது அந்த பணம் மாயமாகி விட்டது உண்மையென்றால் ஏன் இந்த இரண்டு ஆண்டுகள் என்னிடம் இது குறித்து எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை என்னை அழைத்து பேசாதவர்கள் இப்போது தங்களது தேர்தல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
இந்த 7 லட்சம் வெள்ளியின் நிலை என்னவென்பது குறித்து முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியமும் இந்நாள் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் நன்கு அறிவர்.
ஆதலால், தோல்வி பயத்தில் என் மீது அவதூறு பரப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று நேற்று பேரா மாநில மஇகா தலைவர்களுடனான சந்திப்பின்போது மஇகா தேசிய துணைத் தலைவர் வேட்பாளருமான டான்ஶ்ரீ ராமசாமி இவ்வாறு கூறினார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் 7 லட்சம் வெள்ளிக்கான ஆதாரங்களை அனைவர் முன்னிலையிலும் அவர் வெளிபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment