சிரம்பான் -
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன் அச்சமயம் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்றதோடு கைப்பேசி, 500 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றான்.
இச்சம்பவம் தாமான் சிரம்பான் ஜெயாவில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ந்தது.
குடும்ப மாதான கே.குணவதி (வயது 39) மூன்று பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்ற நிலையில் அவரின் கணவரும் வேலைக்குச் சென்று விட்டார்.
அச்சமயம் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் அவரிடம் கொள்ளையிட முயற்சித்தபோது இறைச்சி வெட்டும் கத்தியால் அவரை கழுத்தறுத்துக் கொன்றுள்ளான்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அம்மாதின் 9 வயது இளைய மகன் குணவதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அண்டை வீட்டாரின் சிசிடிவி கேமராவில் குணவதியின் வீட்டினுள் ஹோண்டா வேவ் ரக மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் நுழைந்திருப்பது பதிவாகியுள்ளது.
குணவதியின் உடல் சவப் பரிசோதனைக்காக துவாங்கு ஜபார் சிரம்பான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிசிடிவியில் பதிவாகியுள்ள ஆடவனை தேடி வருவதாகவும் சிரம்பான் போலீஸ் தலைவர் தியூவ் ஹோக் போ கூறினார்.
No comments:
Post a Comment