Tuesday 23 October 2018

தொழில்துறைகளை நவீனப்படுத்துவதில் எம்டியூசி பங்காற்ற வேண்டும்- சிவநேசன்


ரா.தங்கமணி
ஈப்போ-
மலேசியத் தொழிலாளர்களுக்காக போராடும் அதே வேளையில் அவர்களை நவீனப்படுத்தும் பொறுப்பும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு (எம்டியூசி) உண்டு என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

அந்நியத் தொழிலாளர்களை குறைப்பதற்காக 11ஆவது மலேசியத் திட்டத்தில் தொழில்துறையை நவீன மயமாக்குவது தொடர்பில் பிரதமர் துன் மகாதீர் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

அந்நியத் தொழிலாளர்களை குறைக்க  உற்பத்தி, தோட்டத்துறைகளை நவீனமயமாக்கும் ஆலோசனையை துன் மகாதீர் பரிந்துரைத்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த எம்டியூசியின் தலைமைச் செயலாளர் ஜோ.சோலமன், இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என கூறியிருந்தார்.

மலேசியத் தொழில்துறையை நவீனப்படுத்தும்போது அங்கு அந்நியத் தொழிலாளர்கள் ஆதிக்கம் குறைக்கப்படும். அதோடு, உற்பத்தி, தோட்டத் துறைகளை நவீனப்படுத்தும் போது அதனால் உள்நாட்டினர் ஈர்க்கப்பட்டு இத்துறைகளில் பணிபுரியும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இன்று தோட்டத்துறைகளில் 75 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். நவீனமயமக்கால் இத்துறைகளில் ஊடுருவும்போது அங்கு அதிகமான உள்நாட்டினர் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகிறது.

மேலும், இயந்திர தொழில்நுட்பத்தின் ஐவர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் மேற்கொள்ளும்போது அதனால் தொழில்நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதோடு அவர்களுக்கு முறையான சம்பளம், இபிஎப், சொக்சோ போன்ற சலுகைகளையும் சரிவர ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

தேசிய தொழிற்சங்கம் என்ற நிலையில் தொழிலாளர்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காமல் தொழில்துறைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் எம்டியூசியின் முன்னாள் உதவித் தலைவரும் பேரா மனிதவள பிரிவுக்கு பொறுப்பேற்றிருப்பவருமான சிவநேசன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment