Monday 4 June 2018

உலக கிண்ணப் போட்டி நேரடி ஒளிபரப்பு; ஒரு காசை கூட அரசாங்கம் செலவிடவில்லை- லிம் குவான் எங்

கோலாலம்பூர்-
ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டியை ஆர்டிஎம்-இல் ஒளிபரப்பு செய்ய அரசாங்கம் ஒரு காசை கூட செலவிடவில்லை எனவும் விளம்பரத்தாரர்களின் கட்டணத்தைக் கொண்டு இந்த நேரடி ஒளிபரப்புக்கு செலவிடப்படுகிறது என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு போதிய விளம்பரதாரர்களை அரசாங்கம் கொண்டுள்ளது என குறிப்பிட்ட அவர், நாங்கள் ஒரு காசு கூட இதற்கு செலவிடவில்லை என்றார்.

வழக்கமான விலைகளை காட்டிலும் விளம்பரதாரர்கள் கொஞ்சம் கூடுதலாக விளம்பர கட்டணங்களை செலுத்துவார்கள்.  இது நாட்டிற்கான ஒரு நன்கொடையாகும் என அவர் சொன்னார்.

விளம்பரத்தாரர்கள் ஏன் மலேசியா நம்பிக்கை நிதிக்கு உதவவில்லை என கேட்கிறார்கள். நம்பிக்கை நிதிக்கும் காற்பந்து போட்டிக்கும் நிதி வழங்குவதில் வேறுபாடு உள்ளது. உலக கிண்ணப் போட்டிக்கான விளம்பர நிதியை வழங்குவதால் அந்த போட்டி ஒளிபரப்பப்படும்போதும் அவர்களது விளம்பரங்களை ஒளிபரப்ப முடியும். அதன் மூலம் அவர்கள் சிறிது லாபத்தை பெற முடியும்.

வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் அவர்கள் செய்கின்ற முதலீட்டில் சிறிது லாபங்கள் பெற வேண்டியுள்ளதை பொதுமக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நாட்டின் நிதி மோசமான நிலையில் இருப்பதால் ஆர்.டி.எம்.-இல் உலகக் கிண்ணத்தை ஒளிப்பரப்பும் கருத்திற்கு தொடக்கத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வேண்டாம் என்ற நிலையில்தான் இருந்தார்.

ஆனால், இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒளிப்பரப்படும் என்றும் ஆர்.டி.எம்.இல் ஒளிப்பரப்பு செய்வதால் அனைவரும் இலவசமாக அதனைப் பார்க்க முடியும் என விளக்கம் அளித்த போதுதான் அவர் ஏற்றுக்கொண்டதாக லிம் குவான் எங் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் கூடிய விரைவில் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ இது குறித்த அறிவிப்பை செய்வார் என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment