ஈப்போ-
இன்று கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பேரா மாநில அளவிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேரா மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் கூட்டணி அரசு முதன் முதலாக நோன்புப் பெருநாள் உபசரிப்பை கொண்டாடுகின்ற நிலையில் அதனை இங்கு பிரசித்தி பெற்ற 'மூவி அனிமேஷன் பார்க் ஸ்டூடியோ'வில் (MAPS) கொண்டாடியது.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் உபசரிப்பின்போது மாநில மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு, அவர்தம் துணைவியார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பொதுமக்களை வரவேற்றனர்.
பொது மக்களின் பயன்பாட்டுக்கு இலவசமாக திறந்து விடப்பட்ட 'மூவி அனிமேஷன் பார்க் ஸ்டூடியோ'வில் வைக்கப்பட்டிருந்த உணவுகளையும் ரசித்ததோடு அங்குள்ள பல்வேறு விளையாட்டு தளங்களிலும் விளையாடி மகிழ்ந்தனர்.
இது குறித்து பேசிய அஹ்மாட் ஃபைசால் அஸுமு, நோன்புப் பெருநாள் கொண்டாடும் வேளையில் பொது மக்களும் ஒன்று திரண்டு கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக இங்கு முதன் முதலாக கொண்டாடப்படுகிறது.
இங்கு நோன்புப் பெருநாள் உபசரிப்பை நடத்த முதலி 3.00 மணியிலிருந்து 6.00 மணி வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் 15,000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டுள்ள நிலையில் அவர்களின் சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழ இரவு 8.00 மணி வரை இலவச நுழைவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஃபைசால் அஸுமு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், 'மேப்ஸ்' நிர்வாகி, அதிகாரிகள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment