Thursday 28 June 2018

'இனவாத அரசியல்' இனியும் தலை தூக்குமா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகின்ற நிலையில் தேசிய அரசியல் நீரோட்டம் இன்னமும் பரபரப்பான சூழலையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மே 9ஆம் தேதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வந்த தேசிய முன்னணியை 'வீட்டுக்கு அனுப்பி' ஆட்சியை கைப்பற்றியது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.

இந்த கூட்டணியின் வெற்றி எதிர்பாராத ஒன்று என்ற நிலையில்  மாற்றத்தை விரும்பிய மலேசியர்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது.

இனவாத ரீதியிலான  கட்சிகளைக் கொண்டு 'இன அரசியல்' நடத்திய தேசிய முன்னணியை தூக்கி எறிந்த மக்கள் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளனர்.

நம்பிக்கைக் கூட்டணியில் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே பல இன கட்சிகளைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணி மலேசியர்கள் வாக்களித்துள்ளனர்.

இனவாத அரசியலை மலேசியர்கள் வெறுக்க தொடங்கி விட்டனர் என்ற உண்மையின் வெளிபாடாகவே மலாய்க்காரர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அம்னோவின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கைரி ஜமாலுடின், அம்னோவின் கதவுகள் அனைத்து இனத்தவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இனவாத ரீதியிலான கட்சிகளால் தாங்கள் சார்ந்துள்ள இனத்தின் மேம்பாட்டையும் நலனையும் உறுதி செய்யாதபோது அதனால் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்பதை 2008ஆம் ஆண்டு தேர்தலிலேயே மக்கள் உனர்த்தி விட்டனர்.

ஆனால் அதில் சுதாகரித்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்த காரணத்தினால் தேசிய முன்னணி கூட்டணியில் மிகப் பெரிய கட்சியாக விளங்கிய மஇகா, மசீச இந்தியர்கள், சீனர்களின் ஆதரவை இழந்ததோடு அதனால் அம்னோவும் தனது அதிகாரத்தை இழந்து நிற்கிறது.

சமத்துவமிக்க நாடாக உருவாக இனி மலேசியா தன்னை தயார்படுத்திக் கொள்ள முனையும் நிலையில் இனவாத ரீதியிலான கட்சிகள் இனி என்ன செய்யும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment