Tuesday 23 October 2018

அங்கீகரிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இணைந்து பணியாற்றுவதில் தயக்கமில்லை- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகம் யாராக இருந்தாலும் அவர்களுடன் ஒத்துழைத்து பணியாற்றுவதில் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

ஹைகோம் (சீபில்ட்) ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில்  கா.செல்லப்பா, மே.நாகராஜன் ஆகிய இருவரில் யார் அங்கீகரிக்கப்பட்ட  தலைவர் என்ற வழக்கில் 11/3/2014இல் செல்லப்பா அணியினரே அங்கீகரிக்கப்பட்ட அணியினர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகமாக செல்லப்பா அணியினர் திகழும்போது அவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப மாநில அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

செல்லப்பா, நாகராஜன் இவ்விருவரில் யார் அங்கீகரிக்கப்பட்ட அணியினராக நீதிமன்றம் அறிவித்திருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் தயக்கம் காட்டபோவதில்லை.

நீதிக்கு உட்பட்டு எனது செயல்பாடுகள் அமையும் நிலையில் சீபில்ட் ஆலயத்தை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை ஒருபோதும் பின்வாங்கப்படாது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு மேம்பாட்டு நிறுவனமான ஓன் சிட்டி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆலயத்திற்கு நிலமும் மானியமும் வழங்கப்பட்ட நிலையில் இப்போது அதனை திசை திருப்பும் வகையில் சில தரப்பினரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இவ்வாலயம் உடைக்கப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாலயம் புதிய இடத்தில் இந்து சமய ஆகமவிதிபடி பாலஸ்தாபனம் செய்யப்படும் என்பதே உண்மையாகும் என கணபதிராவ் கூறினார்.

No comments:

Post a Comment