ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நடந்து முடிந்த மஇகா தேர்தலில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ.முருகையா உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் (12ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்) துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோ முருகையை பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி மஇகாவில் இணைந்தார்.
துணை அமைச்சராக பதவி வகித்திருந்த போதிலும் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்ததால் எவ்வித பதவிகளையும் அடைய முடியாமல் தனித்து விடப்பட்டார்.
இந்நிலையில், மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில் உதவித் தலைவருக்கு போட்டியிட்ட டத்தோ முருகையா வெற்றி பெற்றார்.
வேறொரு கட்சியிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் விலகி இன்று மஇகாவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக டத்தோ முருகையா எவ்வாறு வர முடிந்தது? என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட தேசிய முன்னணியின் பங்காளி கட்சியாக இருக்கும் மஇகா மீண்டும் எழுச்சி பெற சிறந்த சேவையாளர்களை உள்ளடக்கிய தலைமைத்துவம் அவசியம் என்பதை மஇகாவினர் உணர்ந்திருப்பதே இதற்கு காரணம் என கூறலாம்.
பிரதமர் துறையின் துணை அமைச்சராக பதவி வகித்தபோது டத்தோ முருகையாவின் சேவைகள் சிறந்த முறையில் இருந்தன. அவரின் செயல்பாடுகளால் பொது புகார் பிரிவு புத்துயிர் பெற்றிருந்தது.
இத்தகைய துரிதமான செயல்பாடுகள் ம இகாவின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவே இன்று அக்கட்சியின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணியாக அமைந்துள்ளன.
மஇகாவினர் தம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி கூறி கொள்ளும் அதே வேளையில் ம இகாவின் எழுச்சி பெற்ற கட்சியாக உருவாக்கம் காண்பதற்கு தேசியத் தலைவருடன் கரம் கோர்த்து செயல்படவிருப்பதாக டத்தோ முருகையா கருத்து தெரிவித்திருந்தார்.
மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிட்டனர். அதில் டத்தோ டி.மோகன், டத்தோ சி.சிவராஜா, டத்தோ முருகையா ஆகியோர் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


No comments:
Post a Comment