Wednesday 24 October 2018

சிறந்த எதிர்க்கட்சியாகவும் வலுவான கட்சியாகவும் மஇகாவை உருமாற்றவோம்- டத்தோ சிவராஜ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்ற மஇகாவை வலுபடுத்துவதே தனது முதல் பணி என்று உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோ சி.சிவராஜ் தெரிவித்தார்.

மஇகாவின் இன்றைய சூழலில் கட்சியை வலுப்படுத்துவதே முக்கியமாக உள்ளது. அதற்குரிய வேலைகளை முன்னெடுப்பதே இன்றைய அவசியமாக பார்க்கப்படுகிறது.

மஇகா சிறந்த எதிர்க்கட்சியாக திகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஆளும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய  திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மஇகாவின் குரலாக எதிரொலிப்பேன் என்று டத்தோ சிவராஜ் கூறினார்.

இந்திய சமுதாயத்திற்காக தற்போது ஆளும் அரசாங்கம் மேர்கொள்ளும் நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டியதாகும். இன்னும் ஒரு வாரத்தில்  2019க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்திய சமுதாயத்திற்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து குரல் எழுப்புவேன்.

இந்த பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்காக கூடுதலான திட்டங்கள் வகுக்கப்படுமா? பழைய திட்டங்களே தொடரப்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இவையனைத்திற்கும் மேலாக மஇகாவை  மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக உருமாற்றுவது அவசியமான ஒன்றாகும். கட்சியின் தேசியத் தலைவர், துணைத் தலைவர், இதர உதவித் தலைவர்கள், செயலவை உறுப்பினர்கள், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய அனைத்துத் தரப்பினருடனும் கைகோர்த்து பணியாற்றுவதோடு அடுத்த பொதுத் தேர்தலுக்குள் மஇகாவை வலுவான கட்சியாக உருமாற்றும் திட்டங்கள் வகுக்கப்படும் என்று 'பாரதம்' மேற்கொண்ட சிறப்பு நேர்காணலில் டத்தோ சிவராஜ் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment