Wednesday, 27 May 2020

இணையம் வழி இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்- லிம் சாடல்

பெட்டாலிங் ஜெயா-
ஜசெகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இணையம் வழி பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடுமையாக சாடியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் வழங்கப்படுவது ஒரு குற்றச்செயல் என கூறியுள்ள அவர், சமூகவியல் பிரச்சினையான இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய் ஆகியோருக்கு இணையம் வழி நிகழ்த்தப்பட்ட  பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக இணையம் வழி பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்படுபது தொடர்பில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சும் காவல் துறையும் பெண்கள் பாதுகாக்கப்பட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் பாதுகாப்பு கழகம் (அவாம்) வலியுறுத்தியுள்ளது.

ஜமாலியா, லிம் ஆகியோருக்கு பேஸ்புக் வழி மத விவகாரம், பாலியல் அச்சுறுத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற அநாகரீகமான மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அண்மையில் பேஸ்புக் வழி பகடிவதைக்கு ஆளான பினாங்கைச் சேர்ந்த 20 வயதான திவ்யநாயகி ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது மலேசியர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.



No comments:

Post a Comment