Monday 18 May 2020

அரசியல் ஆடுகளமாகும் நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெழுப்பிய துன் வீ.தி.சம்பந்தன்

ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-
மலேசிய நாடாளுமன்றம் இன்று வரலாறு காணாத சரித்திரத்தை படைக்கவுள்ளது.

பல்வேறு அரசியல் போராட்டங்கள், சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், அணி தாவல் உட்பட வரலாற்றில் முதல் முறையாக இருமுறை பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார்.

இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்கள உள்ளடக்கிய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் வேளையில் அந்த நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெழுப்பியவர் ஓர் இந்தியர் என்பதை நாம் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்.

ஆம்... மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவர் துன் வீ.தி. சம்பந்தனையே அந்த புகழ் சாரும்.

1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துன் வீ.தி.சம்பந்தன்  பல்வேறு அமைச்சுகளில் பதவி வகித்தார்.

அவ்வாறு பொதுப்பணி அமைச்சராக தாம் பதவி வகித்தபோது இப்போது கம்பீரமாக வீற்றிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்கிறார்.

1960இல் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் துன் வீ.தி.சம்பந்தன் 1962இல் நாடாளுமன்றக் கட்டடப் பணிகளை நிறைவு செய்கிறார்..

இந்த நாடாளுமன்றக் கட்டடத்தை அன்றைய மாமன்னர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த நாடாளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் போது ஆட்சியில் இருத்தது பெரிக்காத்தான் கட்சி எனும் அம்னோ, மசீச, மஇகா ஆகியவற்ற்ஐ உள்ளடக்கிய கூட்டணி.

1969ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கலவரம் மலேசிய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஆகும்.

அதன் பின்னர் தேசிய முன்னனி கூட்டணி அமைக்கப்பட்டு கெராக்கான், பிபிபி  போன்ற அன்றைய எதிர்க்கட்சிகளும் இக்கூட்டணியில் இணைக்கப்பட்டன.


நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

பெரிக்காத்தான் கட்சி ஆண்டபோது கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் சுங்கை சிப்புட் மண்ணின் மைந்தனான துன் சம்பந்தன் மறைந்து இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சந்திக்கும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுவது வரலாறுதான்.
துன் சம்பந்தனின் வரலாறு இதோடு மட்டும் நின்று போய்விடாது. தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் எனும் இந்தியர்களை தலைநிமிர்ந்து பார்க்கச் செய்யும் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி அதன் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத சரித்திர நாயகனாக வாழ்ந்து மறைந்த துன் சம்பந்தனாரின் புகழை என்றும் மறவாமல் போற்றுவோம்.

வாழும் தேகம் மறைந்து போகலாம். ஆனால் படைத்த வரலாறு என்றும் மறைந்து போகாது. அவ்வாறான ஒரு வரலாறுதான் துன் வீ.தி.சம்பந்தன்.

(குறிப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்ற வரலாற்று தகவல்களை வழங்கியர் சுங்கை சிப்புட் கி.மணிமாறன்.)

No comments:

Post a Comment