Saturday 9 May 2020

மானியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்; ஆலய நிர்வாகங்களுக்கு கணபதிராவ் அறிவுறுத்து

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டிலுள்ள ஆலயங்கள் வெறும் மானியத்தை பெறுவதில் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மக்கள் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இந்துக்களிடையே சமய நன்னெறியை போதிக்கவே ஆலயங்கள் செயல்படுகின்றன. ஆனால்  சமயத்தை தாண்டியும் சமூகம் என்ற ஒரு கடப்பாட்டை ஆலயங்கள் மறந்து விடக்கூடாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதில் பி40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினர் தங்களின் வருமானத்தை இழந்துள்ளனர்.

இத்தகைய மக்களுக்கு உதவிடும் வகையில் பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் பெளத்த ஆலயங்களும் பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இதுபோன்று நாட்டிலுள்ள பல ஆலயங்களும் தங்களது வட்டாரத்திலுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவது மகிழ்ச்சிகரமானதாகும். அத்தகைய ஆலய நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள்.

ஆனால், இதில் சில ஆலயங்கள்  வெறும் மானியத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது வேதனையளிக்கிறது. மக்கள் சேவையில் முனைப்பு காட்டாமல்  மானியத்திற்காக மட்டுமே அவ்வாலயங்கள் செயல்படுவது வேதனைக்குரியதாகும்.

ஒரு பேரிடர் சம்பவமாக கருதப்படுகின்ற இத்தகைய சூழலில் கூட பொதுநலத்தை கருதாமல் சுயநலமாக செயல்படும் ஆலயங்களின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும் என்று செக்‌ஷன் 18இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பி40 பிரிவினருக்கு  மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் கூறினார்.

இந்நிகழ்வில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா, ஷா ஆலம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் யுகராஜா, சுந்தரம், இந்திய சமூகத் தலைவர்கள் முரு, கோபி, பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment