Thursday 13 September 2018

கமலின் சப்பாணி வேடத்தில் நாகேஷை நடிக்க வைக்க எண்ணினேன் - பாரதிராஜா



சென்னை-
கமல் நடித்த பட்டாம்பூச்சி,  தாம்பத்தியம் ஒரு சங்கீதம் போன்ற பல படங்களை தயாரித்த ரகுநாதன் தயாரிக்கும் புதிய படம் மரகதக்காடு. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, இலியாஸ் காத்தவன் நடித்திருக்கின்றனர். மங்களேஸ்வரன் இயக்கி உள்ளார். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜெய்பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இதன் ஆடியோ வெளியிடப்பட்டது. 

இதில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசும்போது,’சமூக நோக்குடன் இப்படத்தை எடுத்துள்ளனர். இது முழுக்க காட்டு பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. கூரை வீட்டில் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல்போய்விட்டது. இப்படத்தின் டிரெய்லரை பார்த்தபோது கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்ற யோசனைகூட எனக்கு வருகிறது. இப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். 

அதை இப்படத்தின் காட்சிகள் உறுதிப்படுத்துகிறது. இதில் நடிக்கும் நட்சத்திரங்களை நேரில் பார்க்கும்போது அவர்களின் அழகு கண்ணுக்குள் நிற்கிறது. ஆனால் படத்தில் அவர்களது தோற்றம் மாற்றப்பட்டிருக்கிறது. கமல் அழகாக இருந்ததால்தான் 16 வயதினிலே படத்தில் அவரை நான் சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு பிடிக்கிறது. 

16 வயதினிலே படத்தை பிளாக் அண்ட் ஒயிட் படமாக எடுக்க எண்ணிய சமயத்தில் நாகேஷைதான் சப்பாணி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். பின்னர் அப்படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். மரகதக்காடு படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது பங்களிப்பை அற்புதமாக தந்திருக்கிறார்கள். இந்த திரையுலகின் சாலையை செப்பனிடப் போகிறவர்கள் இவர்களைப் போன்ற இளைஞர்கள்தான்’ என்றார்.

No comments:

Post a Comment