Thursday 18 July 2019

பணி நீக்க நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை; தமிழ் நேசனுக்கு எதிராக முன்னாள் பணியாளர்கள் போலீஸ் புகார்


கோலாலம்பூர்-
பணி நீக்கம் செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப நஷ்ட ஈட்டை வழங்காத தமிழ் நேசன் நாளிதழ் நிர்வாகத்திற்கு எதிராக அதன் முன்னாள் பணியாளர்கள் இன்று கோம்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடந்த ஜனவரி 30ஆம் தேதியோடு தனது சேவையை நிறுத்திக் கொண்ட தமிழ் நேசன், அதன் பணியாளர்கள் 40 பேருக்கு மார்ச் மாதத்திற்குள் நஷ்ட ஈட்டை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.

ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிபடி இந்நாள் வரையிலும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என்று அந்நாளிதழின் முன்னாள் தலைமையாசிரியர்  கே.பத்மநாபன் தெரிவித்தார்.

பணியாளர்கள் அனைவருக்கும் ஜனவரி 28ஆம் தேதி வேலை நிறுத்தக் கடிதம் வழங்கப்பட்டது. அதில் மார்ச் 31ஆம் தேதி வரைக்குமான சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் பிப்ரவரி மாதச் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை.

அதோடு, தொழிலாளர்கள் அனைவருக்கும் இபிஎஃப், சொக்சோ சந்தா சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட போதிலும் அந்த தொகை சம்பந்தப்பட்ட இலாகாவில் கடந்த 5 மாதமாக செலுத்தப்படவில்லை.

இது ஒரு வர்த்தக குற்றம் என்பதால் இது குறித்து போலீசில் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.


No comments:

Post a Comment