Wednesday 3 July 2019

இந்திய சமுதாயத்திற்காக வெ.20 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது- சிவகுமார்

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக மித்ரா அமைப்பின் வழி முதல் கட்டமாக 20 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக  மித்ரா அமைப்பின் வாயிலான முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தனியார் துறை சார்ந்த எத்தனை அமைப்புகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது? போன்ற கேள்விகளை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தேன்.

இந்திய சமுதாயத்தை உள்ளடக்கிய 38 சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வெ. 20,336,524.00 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, சமூகம், பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.

எண்ணெய், எரிவாயு, இணைய பாதுகாப்பு, தொலை தொடர்பு பொறயியல் போன்ற பயிற்சி திட்டங்களுக்கும் 6,500 பாலர் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் இந்நிதி ஒதுக்கப்பட்டது.

பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் வாயிலாக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.  அதில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 6 நடவடிக்கைகளுக்கு 2,322,350.00 வெள்ளியும், கல்வி, பயிற்சி சார்ந்த 17 நடவடிக்கைகளுக்கு  14,197,290.00 வெள்ளியும், அடையாள, உள்ளடக்கம் சார்ந்த 4 நடவடிக்கைகளுக்கு 746,820.00 வெள்ளியும், சமூக மேம்பாடு, சமூக நலன் சார்ந்த 11 திட்டங்களுக்கு 3,070,064.00 வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தனது கேள்விக்கு மக்களவையில் பதிலளிக்கப்பட்டதாக சிவகுமார் சொன்னார்.

முதல் தவணையாக இத்திட்டங்களுக்கு 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாண்டு 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 20 விழுக்காடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் எந்தெந்த அமைப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. அந்த விரிவான விளக்கத்தை தான் நான் எதிர்பார்த்தேன். இருந்தபோதிலும் 20 விழுக்காடு நிதி ஒதுக்கீடு இந்திய சமுதாயத்திற்காக செலவிடப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியதாகும் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment