Wednesday 8 May 2019

ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா? -பகுதி 1

ரா.தங்கமணி


கோலாலம்பூர்-
2018 மே 9இல் நிகழ்ந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சியமைத்து நாளையுடன் ஓராண்டு பூர்த்தியாகிறது.

நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் கிடைத்ததன் விளைவாக நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தையும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களின் ஆட்சி உரிமையையும் கைப்பற்றியது. (2008 முதல் சிலாங்கூர், பினாங்கு ஆகியவை நம்பிக்கைக் கூட்டணி வசம் உள்ளது).

தேசிய முன்னணியின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட துணிந்த மலேசியர்கள் ‘புதிய ஆட்சி’ மக்களாட்சியாக திகழும் என்றே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் துன் மகாதீர் பிரதமராகவும் டத்தோஶ்ரீ வான் அஸிஸா துணைப் பிரதமராகவும்  இந்தியர்களின் சார்பில் குலசேகரன், கோபிந்த் சிங், சேவியர் ஜெயகுமார், செனட்டர் பி.வேதமூர்த்தி, ஆகியோர் அமைச்சர்களாகவும் ஆர்.சிவராசா துணை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்த இந்த  ஓராண்டு காலத்தில் மக்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதில் சாதித்தது என்பதை விட கொஞ்சம் அதிகமாகவே சோதித்து விட்டது எனலாம்.

தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அதன் பின்னர் இடம்பெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை எழச் செய்தது.

1. மீறப்பட்ட வாக்குறுதிகள்

நாட்டின் பொதுத் தேர்தலின்போது மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிகள் வானளாவிய வாக்குறுதிகளை வழங்கின.

இதில் ஆட்சியை பிடித்த நம்பிக்கைக் கூட்டணியின் முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை பார்ப்போம்.

            ஜிஎஸ்டி வரி (பொருள், சேவை வரி) அகற்றப்படும்
        -     தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திரச் சம்பளம் வெ.1500.00
-         பிடிபிடிஎன் கல்வி கடன் ரத்து
-         பெட்ரோல் விலை வெ.1.50ஆக குறைக்கப்படும்
-         வாழ்க்கைச் செலவீனம் குறைக்கப்படும்
-         நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் அகற்றப்படும்

அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சாதித்துள்ளதா? என்று கேள்வி கேட்டால் பலர் கடுப்பாகி விடுவர். அந்தளவுக்கு மக்களை சோதித்துள்ளது நம்பிக்கைக் கூட்டணி.

ஜிஎஸ்டி அகற்றப்படும் என்ற வாக்குறுதியே பெரும்பாலான வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்க காரணமாக அமைந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுகிறது என்ற இனிப்பான செய்தியை சொல்லிவிட்டு எஸ்எஸ்டி வரி (விற்பனை, சேவை வரி) விதிக்கப்படும் எனும் இடியை மக்கள் தலையில் இறக்கி விட்டனர்.

ஜிஎஸ்டி வரிக்கு மக்கள் எதிராக திரண்டு நின்றதற்கு காரணமே பொருள் விலையேற்றம்தான். அதிகரித்துக் கொண்டே போகும் பொருட்களின் விலையால் மக்கள் அடைந்த ஆத்திரத்தின் வெளிப்பாடே தேசிய முன்னணியை மண்ணைக் கவ்வச் செய்தது.
ஜிஎஸ்டி வரியை நீக்கியதாக பக்கத்தான் ஹராப்பான் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும்  சரிவு காணாத பொருட்களின் விலையால் மக்களின் வாழ்வாதாரச் சூழலில் எவ்வித மாற்றமும் இல்லை.

அதோடு, தேர்தல் கொள்கை அறிக்கையில் இல்லாத எஸ்எஸ்டி வரியை அமல்படுத்தியதன் விளைவாக மக்களை மடையர்களாக்கிய சாமர்த்தியதனம்தான் நம்பிக்கைக் கூட்டணி  தலைவர்களின் சாதனையாக உள்ளது.

ஜிஎஸ்டி+ எஸ்எஸ்டி விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது மலேசியர்கள் கொண்டிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண தொடங்கியது.

நாளை தொடரும்...

No comments:

Post a Comment