Thursday 17 May 2018

காரசார விவாத களமாகுமா மஇகா மத்திய செயலவைக் கூட்டம்?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்று மஇகா மத்திய செயலவைக் கூட்டம் கூடவுள்ள நிலையில் அதில் காரசாரமான விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

இத்தேர்தலில்  மஇகா மிகப் பெரிய தோல்வியை  எதிர்கொண்ட சூழலில்  மஇகாவுக்குள் உட்பூசல்கள் எழ வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.

குறிப்பாக இத்தேர்தலில் தோல்வி கண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படலாம்.

மஇகா மற்றொரு தலைமைத்துவப் போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக உள்ள சூழலில் இன்று நடைபெறும் மத்திய செயலவைக் கூட்டம் அதற்கு அச்சாரமாக அமையலாம்.

14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னனி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், தேமு, அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகியதை போல் மஇகா தலைவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போதே எழ தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள மத்திய செயலவைக் கூட்டம் மிகப் பெரிய அதிரடியை எதிர்கொள்ளலாம் என்பது காரசாரமான விவாதங்கள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் அதில் 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment