Thursday 31 May 2018

'செடிக்' மானியம் நிறுத்தம்; பிரதமரே தலையிடுங்கள் - ஆசிரியர்கள் வேண்டுகோள்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'செடிக்' அமைப்பு வழங்கி வந்த அலவன்ஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் எங்களது வாழ்விலும் கல்வியிலும் ஒளியேற்றுமாறு பாலர் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பிரதமர் துன் மகாதீரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்பட்டு வந்த 'செடிக்' அமைப்பு மலேசிய பாலர் பள்ளி இயக்கத்திற்கு மானியங்களை வழங்கி வந்தது.

2016, 2017ஆம் ஆண்டுகளில் மானியம் முறையாக வழங்கப்பட்டதால் 438 ஆசிரியர்கள், துணை ஆசிரியர்களுக்கான அலவன்ஸ் எவ்வித தடையுமின்றி வழங்கப்பட்டது.

ஆனால் 2018ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 7,031,316 வெள்ளியை 'செடிக்' அமைப்பே நேரடியாக வழங்குவதாக உறுதியளித்த நிலையில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத அலவன்ஸ் தொகை காலதாமதமாக வழங்கப்பட்டது எனவும் ஏப்ரல் மாத அலவன்ஸ் இன்னும் வழங்கப்படாத சூழலில் மே மாத அலவன்ஸ் கேள்விக்குறியாக உள்ளது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது மனவேதனை அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் வெளிபடுத்தினர்.

இந்நிலையில் எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அலவன்ஸ் தொகை  வழங்கப்படுவதோடு அது தொடரப்பட வேண்டும் எனவும் 205 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 7,000 மாணவர்களின் கல்வி போதனையும் பாதிக்கப்படக்கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் புதிய நம்பிக்கையில் ஆட்சியமைத்துள்ள 'நம்பிக்கைக் கூட்டணி' அரசு ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் எனவும் பிரதமர் துன் மகாதீர் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆசிரியர்களும் மாணவர்களும் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment