Tuesday 1 August 2017

மஇகா வேட்பாளர்களை தீர்மானிக்கும் பொது இயக்கங்கள்? -அதிரடி காட்டுவாரா டாக்டர் சுப்ரா?


கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறலாம் என கணிக்கப்படும் வேளையில் பெரும் பூதாகரமாக தற்போது வெடித்துக் கொண்டிருப்பது வேட்பாளர் விவகாரமே.

இத்தேர்தலில் யார் யாரெல்லாம் வேட்பாளராக களமிறங்கவுள்ளனர், இந்த நாடாளுமன்றத் தொகுதியில் யார் களமிறங்கவுள்ளார்? இந்த சட்டமன்றத் தொகுதி இக்கட்சிக்கு தானா? என பல்வேறு கேள்விகள் தினந்தோறும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தேசிய முன்னணியில் பங்காளி கட்சியாக உள்ள மஇகாவின் நிலையைதான் பெரும்பாலான இந்தியர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மஇகா போட்டியிடவுள்ள 9 நாடாளுமன்றத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர் விவகாரம் சர்ச்சையாக எழுகின்ற நிலையில் தற்போது புதியதொரு நெருக்கடி மஇகாவுக்கு எழுந்துள்ளது.

மஇகா போட்டியிடும் தொகுதிகளில் இவர்தான் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என அரசு சார்பற்ற பொது இயக்கங்கள்  (என்ஜிஓ)முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருப்பதுதான் தற்போது மஇகாவுக்கு மிக பெரிய நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

அந்தந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பொது  இயக்கங்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வரும் முக்கிய பிரமுகர்களை 'வேட்பாளராக இத்தொகுதியில் களமிறங்குகள்; உங்களால் வெற்றி பெற முடியும்' என்ற ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை வேட்பாளர்களாகவே உருமாற்றி வருகின்றனர்.

மஇகா போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்கபடும் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு பொது இயக்கங்கள் 'வளர்ச்சி' கண்டுள்ளது மஇகாவின் பின்னடைவையே காட்டுகிறது.

மஇகா தனது பலத்தையும் வலிமையும் நிரூபிக்கக்கூடிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் பொது இயக்கங்களின் இத்தகைய நடவடிக்கைகளை மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தவிடுபொடியாக்குவாரா? அல்லது பொது இயக்கங்களின் கை ஓங்கப்படுவதை வேடிக்கை பார்ப்பாரா?

No comments:

Post a Comment