Wednesday 16 August 2017
மாணவர்களிடையே மேலோங்கிய தேசப்பற்று: 'பிரமாண்ட தேசியக் கொடி' பறக்கவிடப்பட்டது
(ரா.தங்கமணி)
சுங்கை சிப்புட்-
நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் சுங்கை சிப்புட், டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தயாரித்த பிரமாண்ட தேசியக் கொடியை பறக்க விடப்பட்டது.
மெர்டேக்கா மாதம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையேயான தேசப்பற்றை வெளிகொணரும் வகையில் இந்த தேசியக் கொடி தயாரிக்கப்பட்டது.
இப்பள்ளியில் உள்ள 900 மாணவர்களும் 62 ஆசிரியர்களும் சேர்ந்து தயாரித்த 27 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி 3 மாடி கொண்ட பள்ளி கட்டடத்தின் உயரத்திற்கு பறக்க விடப்பட்டது.
இது குறித்து கருத்துரைத்த பள்ளி முதல்வர் ரோஸ்லான் முகமட், கடந்த மூன்று வாரங்களாக சிவிக் பாடநேரத்தின்போது மாணவர்கள் நேரம் ஒதுக்கி தேசியக் கொடியை கையால் தைத்து தயார்படுத்துவர்.
இவ்வாறாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்களிப்போடு ஏற்றப்பட்ட தேசியக் கொடி மாணவர்களிடையேயான ஒற்றுமையையும் தேசப்பற்றையும் மிளிரச் செய்துள்ளது.
80 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்திய மாணவர்களைக் கொண்ட இப்பள்ளி, நகர்புறத்தின் உள்ளே அமைந்திருப்பதால் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
சுங்கை சிப்புட் வட்டாரத்திலேயே இத்தகையதொரு பிரமாண்ட தேசியக் கொடியை பறக்க விட்ட பெருமை இப்பள்ளியையேச் சேரும் என அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் பள்ளி முன்னாள் மாணவருமான யோகேந்திரபாலன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். அதோடு மாணவர்களின் முயற்சியை பாராட்டும் வகையில் 3,000 வெள்ளி நிதியுதவி வழங்கினார்.
இந்நிகழ்வுக்கு பல்வேறு அரசியல், பொது இயக்கத்தின் தலைவர்கள் பிரதிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment