Tuesday 22 August 2017

பிஐசிசியின் ஆக்கப்பூர்வ பணி: இந்தியர்களை பொருளாதாரத் துறையில் மேம்படுத்தும்

(ரா.தங்கமணி)
ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபை (பிஐசிசி) மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் இம்மாநிலத்திலுள்ள இந்தியர் சமுதாயத்தை ஒரு தொழில் முனைவர் சமூகமாக உருவாக்கும் முயற்சியாக அமைந்துள்ளது என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் புகழாரம் சூட்டினார்.

ஒரு துறையில் முன்னேற்றம் கண்டு இன்னொரு துறையில் பின் தங்கினால் அது  சமுதாயத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்காது. அவ்வகையில் இந்திய சமுதாயம் கல்வியில் மேம்பாடு கண்டு வரும் வேளையில் பொருளாதாரத் துறையில் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே இங்கு அதிகமான இந்தியர்கள் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் அடையாளமாகவே பேராக் இந்தியர் வர்த்தக சபை திகழ்கிறது.

1937ஆம் ஆண்டிலேயே பல்வேறு தொழில் முனைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இச்சபை இன்று எம்.கேசவன் தலைமையில் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது பெருமைக்குரியதாகும்.

பேராக் இந்தியர் வர்த்தக சபை இந்திய வணிகர்களுக்கு உந்துதலையும் வர்த்தகத் துறை தொடர்பான வழிகாட்டுதலையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சேவை தொடர வேண்டும். எதிர்கால சவால்களை எதிர்கொண்டு பிற இனங்களுக்கு ஈடாக இந்திய சமூகமும் வர்த்தகத் துறையில் பீடுநடை போட வேண்டும். அந்த பணியை பிஐசிசி திறம்பட பூர்த்தி செய்யும்  என அண்மையில் நடைபெற்ற அதன் நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸம்ரி கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சபையின் தலைவர் எம்.கேசவன், 80ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ள வர்த்தக சபை இன்று சொந்த கட்டடத்தைக் கொண்டிருப்பதோடு இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நடப்பு அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கைகளில் பல இந்தியர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வேளையில் வர்த்தக சபைக்கு முழு ஆதரவு வழங்கி வரும் மாநில அரசாங்கத்திற்கும் சபையில் செயலவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வெற்றி கொடி நாட்டியுள்ள  வர்த்தகர்களுக்கு சிறந்த தொழில் முனைவர்களுக்கான விருது வழங்கி கெளரவிப்பட்டது.

நாட்டின் கார் விற்பனைத் துறையில் முன்னணி  வகிக்கும் சி.எஸ்.டி. ஆட்டோ நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரன், டத்தோ சி.எம்.விக்னேஸ்வரன், ஈப்போ பிஜிடி ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும்  ஈப்போ பழம்பொருள் வணிகர்கள் சங்கத் தலைவருமான வி.சிவாகுமாரன், சங்கநதி நிறுவனத்தின் உரிமையாளர் தி.தனபால், இஞ்ஜினியர் எஸ்.நல்குணலிங்கம், ஏ.மணிமாறன், விக்னேஸ்வரன் தில்லை அப்பன், ஆர்.தனராஜ் ஆகியோரும் விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை எஸ்.ராமலிங்கமும் பொதுச் சேவை, எழுத்துத் துறைக்கான விருதை ஜானகி ராமன் மாணிக்கத்திற்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரபல பின்னணி திரைப்பட பாடகர் எஸ்.பி.பி.சரண் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு சில பாடல்களை பாடி வந்திருந்தோரை  மகிழ்வித்தார். அதோடு பிஐசிசியின் வளர்ச்சிக்கு துணையாக இருந்த ஊடகவியலாளர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
மேலும் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி எஸ்.தங்கேஸ்வரி, மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, முன்னாள் ஆலோசகர் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் உட்பட பல்வேறு வணிகர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment