Monday 7 August 2017

'529ஆவது தமிழ்ப்பள்ளி' ஹீவூட் தமிழ்ப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது



சுங்கை சிப்புட்-
நாட்டில் 529ஆவது தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துள்ள ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்பள்ளியின் அடிக்கல் நாட்டப்பட்டது.
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான மகாத்மா காந்தி கலாசாலையில் நிலவிய மாணவர் இடநெருக்கடியை சமாளிக்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட ஹீவூட் தமிழ்ப்பள்ளிக்கு இன்று வெற்றிகரமாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என பள்ளி செயல் நடவடிக்கைக் குழுத் தலைவர் சொ.தியாகராஜன் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு பின்னர் பேசிய டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், நாட்டின் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பதற்கு எவ்வித தடையுமில்லை.
தமிழ்ப்பள்ளியும் தமிழ்மொழியும் நாட்டில் நிலைத்திருப்பதற்கு மஇகா என்றுமே பக்கபலமாக இருக்கும். அதனை யாரும் அழித்திட முடியாது. ஆயினும் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டால் மட்டுமே அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
மேலும் உரையாற்றிய டத்தோ ப.கமலநாதன், இந்த ஹீவூட் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு காலதாமதம்  ஏற்பட்டதற்கு புதிய வரைதிட்டம் பரிந்துரைக்கப்பட்டதே காரணமாகும்.
6 வகுப்பறைகள் மட்டுமே முந்தைய திட்டத்தில் கூறப்பட்ட வேளையில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டடமே தேவை என நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டது. அதற்கேற்ப மறு வரைதிட்டம் வடிவமைக்கவும் அதற்கான மானியம் ஒதுக்கப்பட வேண்டியதும் இந்த காலதாமதத்திற்கு காரணமாகும்.
ஆயினும் இன்னும் அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த பள்ளி கட்டட நிர்மாணிப்பு பூர்த்தி செய்யப்படவுள்ளது. சுமார் 12 மில்லியன் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பள்ளிக்கூடம் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய பள்ளியாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, 'செடிக்' தலைமை இயக்குனர் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன், பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி, மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோவன் உட்பட மஇகா பிரமுகர்களும் பொது இயக்கத் தலைவர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment