Sunday 18 April 2021

நடிப்பின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர்-

கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பின் வழி நம்மையெல்லாம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக், அகால மரணமடைந்த செய்தி உலகம் எங்கும் உள்ள தமிழர்களைப் போன்று எனக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், அவரின் கோடிக்கணக்கான இரசிகர்களுக்கும் மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவேக், வெறும் நடிகராக மட்டும் இருந்திருந்தால் நாம் அந்த இழப்பால் பெரிய அளவில் வருத்தமடைந்திருக்க மாட்டோம்.

ஆனால், தனது நடிப்புத் தொழிலை விட பல விதங்களில் தனது இரசிகர்களையும் உலகத் தமிழர்களையும் பாதித்தவர் விவேக்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.இராதா போன்ற மாபெரும் கலைஞர்களுக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்போடு சேர்த்து, நமது சமுதாயத்தைப் பாதித்திருக்கும் பல மூட நம்பிக்கைகளையும், காலத்துக்கு ஒத்து வராத வழக்கங்களையும் சாடியவர் விவேக்.

தொடர்ச்சியாக அவரின் அந்த அணுகுமுறையை இரசிகர்கள் கொண்டாடினர். பாராட்டினர். “சின்னக் கலைவாணர்” என பட்டமளித்து மகிழ்ந்தனர்.

அதுமட்டுமல்ல! மறைந்த இந்திய அதிபர் அப்துல் கலாம் அவர்களை விவேக் சந்தித்தபோது அவர் மிகச் சாதாரணமாக “ஒரு மில்லியன் மரங்களை நடுங்கள்” என இட்ட வேண்டுகோளை, தலைமேல் ஏற்று காலமெல்லாம் அதற்கெல்லாம் பாடுபட்டார் விவேக். 

பத்து இலட்சம் மரக் கன்றுகள் நடும் இலக்கை அடைந்த பின்னரும் “தொடர்ந்து இந்தப் பணியைச் செய்யுங்கள்” என அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்காக, அப்துல் கலாம் மறைந்த பின்னரும் தனது மரம் நடும் பணியைத் தொடர்ந்தார் விவேக்.

59-வது வயதில் மறைந்து விட்டாலும் தன் வாழ்நாளில் 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்கணமாகத் திகழ்ந்தவர் விவேக். வாழ்க்கையில் எதைச் சாதிக்க வேண்டும் என மற்ற மனிதர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் விவேக்.

இன்று அவர் மறைவை முன்னிட்டு அனுதாபம் தெரிவிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களில் மரங்களை நட்டு அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றனர் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அதைவைத்து அவர் மற்ற மனிதர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது.

அடிக்கடி மலேசியா வந்து சென்ற விவேக் இங்கும் பல நண்பர்களைக் கொண்டிருந்தார். எண்ணற்ற இரசிகர்கள் அவருக்கு மலேசியாவிலும் இருக்கின்றனர்.

அத்தகைய இரசிகர்களில் நானும் ஒருவன், எனது குடும்பத்தினரும் அவரின் இரசிகர்கள்தான் என்ற முறையில், அவரின் மறைவு எங்களையும் மிகவும் பாதித்திருக்கிறது.

இருந்தாலும், அவர் நமக்காக அடையாளம் காட்டிச் சென்றிருக்கும் மனித நேயம், மூட நம்பிக்கை ஒழிப்பு, இன, மத பேதமின்றி அப்துல் கலாம் போன்ற மாமனிதரை தனது குருவாக அவர் ஏற்றுக் கொண்டு செயல்பட்டது,  சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக தமிழ்நாடு முழுவதும் மரங்களை நட்டது, என்பது போன்ற நற்பணிகளால் அவர் நம்மால் எப்போதும் நினைவு கூரப்படுவார்.

அதுமட்டுமின்றி, சினிமா என்ற ஊடகம் வெறும் நகைச்சுவைக்கானது மட்டுமல்ல, பணம் சம்பாதிக்கும் தொழில் மட்டுமல்ல, அதையும் மீறி பல நல்ல கருத்துகளை தனது நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லமுடியும், சமுதாயத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என தனது பல நகைச்சுவைக் காட்சிகளால் நிரூபித்துச் சென்றிருக்கிறார் விவேக்.

மற்ற திரைப்படக் கலைஞர்களும் இதே போன்று விவேக் பாணியில் தங்களின் திரைப்படத் தொழிலோடு, மனித சமுதாயத்திற்கு பயன் விளைவிக்கும் நற்பணிகளையும் செய்ய முன்வர வேண்டும். அதன் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை நமது சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும்.

விவேக் அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதே வேளையில், அவரின் சமுதாய சேவைகளை மலேசியத் தமிழர்கள் என்றும் நினைவு கூர்ந்து போற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அனுதாபச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்தெரிவித்தார்.

No comments:

Post a Comment