Thursday 8 April 2021

தமிழ்மொழி பண்பாட்டு விவகாரங்களில் எங்களுக்கும் பங்களிப்பு உண்டு- தமிழ் முசுலிம் அமைப்பு

ஷா ஆலாம்-

தமிழர்கள் பல சமயங்களில் இருக்கிறார்கள். தமிழர்கள் தழுவிய சமயங்களில் ஒன்று தான் இசுலாம். இசுலாம் சமயத்தைத் தழுவினாலும் தாய்மொழியால் நாங்களும் தமிழர்கள் தான். தமிழ் மொழி, பண்பாட்டு விவகாரங்களில் எங்களின் பங்களிப்பு உண்டு எனத் தமிழ் முசுலிம் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


பல்வேறு சமயத்தால் வேறுபட்டிருப்பதால் ஒரு சிலரால் சில பண்பாட்டுக் கூறுகளை முழுதாகக் கடைபிடிக்க முடியாமல் போனது வேதனைக்குரிய ஒன்றாகும். 

இருந்த போதிலும், தமிழ் நாட்டிலும் மலேசியாவிலும் பெரும்பான்மையானத் தமிழ் முசுலிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மொழி பண்பாட்டு விவகாரங்களை முறையாகவும் சரியாகவும் கட்டிக் காத்து வருகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது என தமிழ் முசுலிம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த ஹாஜி பஷிர் அகமது தெரிவித்தார். 

தொடக்கக் காலம் தொட்டே பல இலக்கியங்களையும் தமிழ் முசுலிம் சமூகத்தினர் படைத்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், பேச்சு வழக்கில், “நீங்கள் தமிழர்கள்” என மற்றச் சமயத் தமிழர்களைக் குறிக்கும்போது “அப்படியென்றால் நாம் யார்?” என்ற கேள்வியும் எழுகிறது. இப்படி பேசுவதைத் தமிழ் முசுலிம் சமூகத்தினர் முதலில் குறைக்க வேண்டும் என்பது தமது கருத்தாகிறது என ஹாஜி பஷிர் அகமது குறிப்பிட்டார். 

மேலும், தமிழ் மொழி, பண்பாட்டு விவகாரங்கள் தொடர்பாக தற்போது அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் முசுலிம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்பாட்டுச் சங்கம் எனும் தளத்தில் இருந்து சேவையாற்ற இருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment