Sunday 25 April 2021

திருமதி மோகனசெல்வி குடும்பத்திற்கு 'யெஸ்' அறவாரியம் உதவிக்கரம் நீட்டியது

ரா.தங்கமணி

செராஸ்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் வேலை இழந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த செராஸ், அம்பாங் பகுதியைச் சேர்ந்த திருமதி மோகனசெல்வி குடும்பத்தினருக்கு 'யெஸ்' எனப்படும் ஏரா சூரியா அறவாரியம் (Yayasan Era Suria) உதவிக்கரம் நீட்டியது.

இப்பகுதியிலுள்ள துரித உணவகம் ஒன்றில் திருமதி மோகனசெல்வி, கோவிட்-19 பாதிப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பினால் வேலையை இழந்தார்.

பின்னர் இங்குள்ள பள்ளி ஒன்றில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில் அந்த தொழிலும் நிரந்தரம் இல்லாமல் அல்லாடி கொண்டிருந்தார்.

5 பிள்ளைகளுடன் உடல் நலம் குன்றிய கணவரையும் கவனித்து வரும் திருமதி மோகனசெல்வியின் நிலையை அறிந்த யெஸ் அறவாரிய தலைவர் நந்தகுமார், அவர்தம் குழுவினர் இக்குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர்.

அவ்வகையில் அண்மையில் திருமதி மோகனசெல்வியின் வீட்டிற்கு வந்த நந்தகுமார், அறவாரியத்தின் இயக்குனர்கள் டோனி கிளிஃபர்ட், எஸ்.மகாலிங்கம், செயலாளர் ஃபரிடா, வாரிய உறுப்பினர்கள், மளிகைப்பொருட்கள், சிறார்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள், கட்டில், மெத்தை போன்றவற்றை வழங்கியதோடு, மின்சார கம்பிகளை பழுதுபார்க்கவும் உதவினர்.

மேலும், சிறு வணிகத்தில் ஈடுபட ஆர்வம் உள்ள திருமதி மோகனசெல்விக்கு வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக உதவித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நந்தகுமார் குறிப்பிட்டார்.

இதனிடையே 'யெஸ்' அறவாரியத்தினர் வழங்கிய உதவியில் நெகிழ்ந்த திருமதி மோகனசெல்வி அவர்களுக்கு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment