Friday 22 May 2020

Fake Profile: இளம் பெண்ணின் உயிரை குடித்த 'ஜோக்கர் ஒருவன்'

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'வறுமை கோட்டில் வாழும் குடும்பம். கணவரின் மாதச் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. உடனே தனது சமையல் கலையை மலாய் மொழியில் விவரிக்கும் காணொளியை யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்கிறார். அது மக்களின் அமோக வரவேற்பை பெற்று நாடே அறியும் பெண்ணாக மாற்றியதோடு பிரதமர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மீடியாக்கள் என பாராட்டுகள் குவிந்த்தோடு யூ டியூப் சேனலின் வழி முதல் வருமானத்தையும் பெறுகிறார்". இது திருமதி பவித்ராவின் கதை.

"20 வயது நிரம்பிய குமரி பெண் தன்னுடன் பணிபுரியும் சகப் பணியாளருடன் 'டிக் டாக்' செயலியின் வழி எடுத்த காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட அதை கண்ட சமூகவாதிகளின் கொந்தளிப்பான வார்த்தைகள் அந்த இளம் பெண்ணின் இதயத்தை கீற, ரணகணமான இதயத்துடன் தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் துயர முடிவை எடுக்கிறாள். மரணம் தழுவிக் கொள்ள தாயின் கரங்களில் சவமாய் விழுகிறாள்". இது குமாரி திவ்யநாயகியின் கதை

இவ்விரு சம்பவங்களும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் மலேசியாவில் அண்மையில் அரங்கேற்றப்பட்ட சம்பவங்களாகும்.

வறுமையில் வாழும் ஒரு பெண்ணை வாழ்த்தி வாழ வைத்த சமூக ஊடக பயனர்கள்தான் 20 வயதே நிரம்பிய ஒரு பெண்ணை சவக்குழியில் தள்ளியதற்கும் காரணியாக அமைந்துள்ளனர்.
அந்நிய நாட்டவரான சக பணியாளருடன் டிக் டாக் காணொளியில் இருந்த ஒரே காரணத்திற்காக சமூகத்தின் பார்வையில் தவறான கண்ணோட்டத்தில் ஆவேசமான வார்த்தைகளால் அரச்சிக்கப்பட்டதன் விளைவே திவ்யநாயகி மரணத்தை தழுவி கொண்டார்.

சமூக ஊடகம் இரு பக்கமும்  கூர்மையை கொண்ட கத்தியை போன்றது. நல்லதும் தீயதும் உடனே அரங்கேற்றப்படும் நிலையில் தலையும் தெரியாமல் வாலும் புரியாமல் அதிமேதாவிகளாக செயல்படும் அரைவேக்காடுகளின் செயலால் ஓர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

'ஜோக்கர் ஒருவன்' எனும் பொய்யான ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த பெண்ணின் காணொளியின் உண்மைத்தன்மை எதுவென அறியாத மந்தைகூட்டம் அர்ச்சனை மழைகளை பொழிந்துள்ளது.

வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணை சவக்குழியில் தள்ளிய 'ஜோக்கர் ஒருவன்' மட்டும் இங்கே குற்றவாளி அல்ல.. உண்மை நிலவரம் எதுவென தெரியாமல் அலைமோதும் கீ போர்ட் போராளிகளும் குற்றவாளிகளே அவரவர் மனசாட்சியின் முன்பு.

தனது உண்மை முகத்தை கூட வெளியே காட்ட துணிவில்லாமல் பொய்யின் பின்னால் ஒளிந்து கொண்டு இளம் பெண்ணின் உயிரை குடித்த 'ஜோக்கர் ஒருவன்' கோழையே ஆவான்.

ஆண்மையில்லாத ஒரு கோழையின் செயலுக்கு அஞ்சி திவ்யநாயகி தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டது பெண்ணியத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மருட்டலாகும்

அதை இப்போதே களையெடுக்க தவறிவிட்டால் நம் வீட்டிலும் ஒரு 'திவ்யநாயகி' வீழ்த்தப்படலாம். 

ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறதென்றால. அதன் உண்மைத்தன்மையை அறிய போராடுங்கள். அதை விடுத்து வெறும் கீ போர்ட் போராளிகளாக மட்டும் விளங்க வேண்டாம். பின்னாளில் களையெடுக்கப்பட வேண்டியவர்களாக நீங்களே உருவாகலாம்.

No comments:

Post a Comment